விடியல் இல்லா சிறைவாசம் : வேதனைப்படும் இஸ்லாமிய மக்கள்!!

741 0


தமிழகத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவது குறித்து பேசப்பட்டது இஸ்லாமியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் காவல்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் சிறையில் நீண்ட நாட்களாக இருக்கும் கைதிகளின் நலன் கருதி அண்ணா பிறந்த நாளையொட்டி மனிதாபிமான அடிப்படையில் 700 ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய முடிவு எடுத்துள்ளோம் எனக் கூறினார். 

இச்சூழலில் தமிழக அரசின் உள்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை பாகுபாட்டையும், சமத்துவமின்மையையும் ஏற்படுத்துவதுடன் நீண்ட நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளுக்குக் கிடைக்கிற அரசின் பொது மன்னிப்பு என்பது இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதை உறுதிப்படுத்தியுள்ளது.

மனிதாபிமானம் மற்றும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வதற்கான அனைத்துத் தகுதிகள் இருந்தும் பலர் விடுதலை செய்யப்படாமல் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் மற்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களே என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிப்பதை நாம் சாதரணமாகக் கடந்து விடமுடியாது. மேலும் இதில் பலர் இதுவரை குற்றம் நிரூபிக்கப்படாமல் விசாரணைக் கைதிகளாகவே நீண்ட காலம் சிறையில் வாடிக்கொண்டிருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பம், பிள்ளைகளைத் தவிக்க விட்டு நீண்ட கால சிறைவாசம் என்பதே கடும் தண்டனைதான். பல்வேறு துயரங்களுடன் சிறையில் நாட்களைக் கடக்கும் சிறைவாசிகளை விடுதலை செய்வதன் மூலம் இவர்களுக்கு மட்டுமின்றி இவர்களின் குடும்பத்திற்கே மறு வாழ்வு கிடைக்கும் என்பது தான் எதார்த்தம். 

இதன் அடிப்படையில் தான், நம் இந்திய தேசத் தந்தை  மகாத்மா காந்தி அவர்கள் ஒரு சிறைவாசியின் மனமாற்றத்திற்கு 7 ஆண்டுகள் அவனை சிறை வைத்தாலே போதுமானது என்று கூறியுள்ளார், ஆனால், அவ்வார்த்தைகள் வெறும் ஏட்டளவில் தான் உள்ளது என்பது மிகுந்த வருத்தமளிக்கின்றது.

சிறைவாசிகள் விடுதலை என்ற விவகாரத்தில், மக்களின் ஜீவாதாரக் கோரிக்கைகளை மனிதாபிமான அடிப்படையில் புதியதாக அமைந்த திமுக அரசு பரிசீலித்து நல்ல முடிவை வெளியிடும் என்ற நம்பிக்கையை இழந்த மக்கள், இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுதலையாவதில் அனைத்து அரசுகளும் ஒரே விதமான அணுகுமுறையைத்தான் கையாளுகிறது என்பது நிதர்சனம்.

தொடர் சிறைவாசத்தால் அந்த குறிப்பிட்ட சிறைவாசி மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அவர்கள் குடும்பம், மனைவி, குழந்தைகள் என்று அடுத்த தலைமுறை வரையிலான அவர்களுடைய பாதிப்புகள் மற்றும் வலிகளை சொல்ல வார்த்தைகள் தேவையில்லை., அக்குடும்பத்தினரின் தொடர் ஜனநாயகப் போரட்டங்களே அதற்கு சாட்சி.

‘ஸ்டாலின் தான் வாராரு, இஸ்லாமிய சிறைவாசிகளுக்கும் விடியலை தரப்போறாரு என்று எதிர்பார்த்த இஸ்லாமிய சிறைவாசிகள் குடும்பத்திற்கு மிஞ்சியது பெருத்த ஏமாற்றமே.. சிந்திப்பீர்..

– பொறுப்பாசிரியர் (அதிரை எக்ஸ்பிரஸ்)

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: