பாரபட்சம் பாராமல் அனைத்து ஆயுள் சிறைவாசிகளுக்கும் விடுதலையை முதல்வர் சாத்தியப்படுத்த வேண்டும் – எஸ்டிபிஐ வலியுறுத்தல்!

444 0


ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விவகாரம்
சட்டத்துறை அமைச்சரின் பதில் அதிர்ச்சியளிப்பதாகவும், பாரபட்சம் பாராமல் அனைத்து ஆயுள் சிறைவாசிகளுக்கும் விடுதலையை தமிழக முதல்வர் சாத்தியப்படுத்த வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று, கடந்த சட்டமன்ற கூட்டத்தில் தமிழக முதல்வர் அறிவிப்புச் செய்தது நீண்டநாள் சிறைவாசிகள் குறிப்பாக முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தேசதுரோகம் மற்றும் வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய சிறைவாசிகள் தவிர்த்து மற்ற சிறைவாசிகளின் பெயர்கள் மட்டும் தான் விடுதலைக்காக பட்டியலிடப்படும் என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் நேற்று திருச்சியில் தெரிவித்தது மிகுந்த அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

கடந்தகால அரசுகளைப் போலல்லாமல் சிறுபான்மையினர் நலன் மீது அக்கறை கொண்டு செயல்படும் திமுக அரசு, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விவகாரத்தில் கருணையுடன் நடந்துகொள்ளும் என்று சிறைவாசிகளின் குடும்பத்தினரும், ஒட்டுமொத்த சிறுபான்மை முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்தது. ஆனால், சட்டத்துறை அமைச்சரின் பதிலால் அவர்களின் எதிர்பார்ப்பு பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

முஸ்லிம் சிறைவாசிகள் அரசு நிர்ணயித்த விடுதலைக்கான அத்தனை தகுதிகளையும் கொண்டவர்கள். உச்சநீதிமன்றத்தின் பல்வேறு உத்தரவுகள் அடிப்படையிலும், சட்டத்தின் அடிப்படையிலுமே அவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய முடியும் என்கிற போது, பாஜகவின் அழுத்தம் காரணமாக விடுதலைக்கான பட்டியல் தயாரிப்பிலேயே அவர்களை புறக்கணிப்பது என்பது மிகவும் பாரபட்சமானதாகும்.

ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் தாங்கள் விடுதலை ஆவோம் என்ற நம்பிக்கையிலும் அவர்களின் பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள் மற்றும் உறவுகள் என அனைவரும் ஒவ்வொரு வருடமும் அரசு நமக்கு கருணை காட்டும் என்ற எதிர்பார்ப்புடனும் அதற்கான அறிவிப்பை ஆவலோடும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சிறைக்கைதிகள் விடுதலையை பொறுத்தவரையில் அவர்களின் குற்றத்தை பார்க்காமல் குற்றவாளிகளின், அவர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில்கொண்டு விடுதலை செய்ய வேண்டும் என்பதே பொது நியதி.

சிறையில் இருப்பவர்களுக்கு கருணை அடிப்படையில் விடுதலை வழங்குங்கள் என்று கூறும்பொழுது, முஸ்லிம்களுக்கு மட்டும் குற்றத்தை காரணமாக்கி அந்த கருணை என்பது கிடையாது என்ற ரீதியில் அரசு ஒவ்வொரு வருடமும் ஏமாற்றத்தையே பதிலாக கொடுத்து வருகின்றது. முஸ்லிம்கள் விஷயத்தில் அரசின் இத்தகைய பாரபட்சமான நடவடிக்கைகள், தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தில் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி வருகின்றது.

ஆகவே, தமிழக அரசு சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் பாரபட்சம் காட்டாமல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற கைதிகளைப் போல கருணை அடிப்படையில் முஸ்லிம் சிறைவாசிகளுக்கும் விடுதலையை சாத்தியமாக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதோடு, திமுக அரசு மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள முஸ்லிம் சமூகத்தை தொடர் ஏமாற்றத்திற்கு ஆளாக்கிவிடக் கூடாது எனவும் கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு பாரபட்சம் பாராமல் அனைத்து ஆயுள் சிறைவாசிகளின் விடுதலைக்கு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: