ஒன்றிய அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க குழு அமைப்பு!

354 0


ஒன்றிய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்க மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA Committee) தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துத் தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

”ஒன்றிய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க, ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, தமிழக முதல்வரைத் தலைவராகக் கொண்டு மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA Committee) அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் துணைத் தலைவராகவும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முதன்மைச் செயலாளர் உறுப்பினர் செயலாளராகவும், உறுப்பினர்களாக மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களான டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ஆ.ராசா, எம்.செல்வராஜ், பி.ஆர். நடராஜன், சு.திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன், பி.ரவீந்திரநாத்குமார், கே.நவாஸ்கனி ஆகியோரும், மாநிலங்களவை உறுப்பினர்களான திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, எ.நவநீதகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் ஆகியோரும்;

மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், டாக்டர் நா.எழிலன், டி.கே.ஜி.நீலமேகம், மு.பூமிநாதன், ஜெ.எம்.எச்.அசன் மௌலானா மற்றும் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் உள்ளனர்.

மேலும், இக்குழுவில் பல்வேறு அரசுத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், மாநில அளவிலான வங்கியாளர் குழுவின் மேலாண்மை இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஒன்றிய அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்களில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பொறுத்து திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையை மதிப்பாய்வு செய்தல், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மாநில அரசால் ஈடுபடுத்தப்பட்டுள்ள மனித வளங்களின் செயல்திறனை வரிசைப்படுத்தி மதிப்பாய்வு செய்தல், வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள தடைகளை நிவர்த்தி செய்து, அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் வடிவமைப்புகளை மேம்படுத்த அல்லது நடுநிலைப்படுத்த உரிய திருத்தங்களைச் செய்ய பரிந்துரைகளை வழங்குதல் ஆகியன இக்குழுவின் பணியில் அடங்கும்.

மேலும், வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக நிதி நிலைமையை மதிப்பாய்வு செய்தல், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நிலப் பிரச்சினைகள் தொடர்பாக மாநில அலுவலர்களால் தேவையான தெளிவை நீட்டிப்பதில் காலக்கெடுவை உறுதி செய்யும் நோக்கில் பல்வேறு திட்டங்களைச் சரியான நேரத்தில் செயல்படுத்தவுள்ள தடைகளை மீளாய்வு செய்தல், திட்டங்களைச் செயல்படுத்துவதில் பெறப்பட்ட புகார்கள் / முறைகேடுகள், பயனாளிகளின் தவறான தேர்வு, முறைகேடான நிதி / திசைதிருப்புதல் போன்ற புகார்களைப் பின்தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்தல் ஆகியவற்றையும் இக்குழு மேற்கொள்ளும்.

பல்வேறு திட்டங்களின் கீழ் அடையாளம் காணப்பட்ட பயனாளிகளின் ஆதார் எண்ணோடு இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளுக்கு நிதி உதவி வழங்குவது குறித்து உரிய வழிகாட்டுதல்களை வழங்குதல், மத்திய அரசின் துறைத் திட்டங்கள், சம்பந்தப்பட்ட மத்திய நிறுவனங்கள் முறையாகச் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை அடையாளம் காணுதல் மற்றும் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின்கீழ் கண்காணிக்கப்படும் திட்டங்கள் தொடர்பாக நிகழ்வுகள் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லுதல் போன்ற பணிகளை இந்த குழு மேற்கொள்ளும்”.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: