கர்நாடகாவில் இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டம் – சமூக வலைத்தளங்களிலும் #StopHindiImposition ட்ரெண்டிங்!

250 0


மத்திய அரசால் இந்தி மொழி நாள் (Hindi Diwas- ஹிந்தி திவாஸ்) கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் கர்நாடகாவில் இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. #StopHindiImposition என்கிற ஹேஷ்டேக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் டிரெண்டிங் ஆகி வருகிறது.

மத்திய அரசால் செப்டம்பர் 14-ந் தேதி இந்தி மொழி நாள் – ஹிந்தி திவாஸ் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி மொழியை திணிக்கும் மத்திய அரசின் போக்கு காலம் காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்படும் நிலையில் இந்தி மொழி நாள் என இந்திக்கு மட்டும் மத்திய அரசு முக்கியத்துவம் கொடுப்பதற்கு கடும் எதிர்ப்பும் தொடருகிறது. ஆண்டுதோறும் இந்தி மொழி நாள் கொண்டாடுவதற்கு எதிராக இந்தி பேசாத மாநிலங்களில் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டத்தின் தாய்நிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. 1938-ல் முதலாவது இந்தி ஆதிக்க எதிர்ப்பு போரை நடத்தியது தமிழ்நாடு. அந்த போராட்ட களத்தில் மாண்டவர்கள்தான் தாளமுத்து, நடராசன் ஆகியோர். நாடு விடுதலை அடைவதற்கு முன்னரே இந்தி ஆதிக்க எதிர்ப்பு கிளர்ச்சிகளை தமிழகம் நடத்தியது.

1960களில் இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாட்டின் பட்டித் தொட்டி எங்கும் நடந்தது. தமிழக இளைஞர்கள் இந்தி ஆதிக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து மாண்டனர்; விஷம் குடித்து உயிர் துறந்தனர்; துப்பாக்கிச் சூடுகளுக்கு இரையாகினர்.. 1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போர் பல நூறு தமிழர் உயிர்களை காவு கொண்டது. இதன் விளைவாக தமிழக அரசியல் களமே தலைகீழாகிப் போனது. அதன் பின்னர் இன்னமும் இந்தி ஆதிக்கம் எந்த நிலையில் வந்தாலும் அதை எதிர்ப்பதில் முன்னணி நிலமாக தமிழகம் இருந்து வருகிறது. அண்மையில் இந்தி தெரியாது போடா என்கிற டி சர்ட்டை இந்தியா முழுவதும் டிரெண்டிங்காக்கினர் தமிழர்கள்.

தமிழகம் பற்ற வைத்த இந்தி ஆதிக்க எதிர்ப்பு நெருப்பு இன்று இந்தி பேசாத அத்தனை மாநிலங்களிலும் பெருந்தீயாக எரிந்து கொண்டிருக்கிறது. அதுவும் மத்திய அரசு இந்தி மொழிநாள் கொண்டாடப்படும் என அறிவித்த பின்னர் ஆண்டு தோறும் செப்டம்பர் 14-ந் தேதி இந்தி ஆதிக்க எதிர்ப்பு நாளாகவும் கடைபிடிக்கப்படுவது தொடருகிறது. கடந்த ஆண்டுகளிலும் ஹிந்தி திவாஸ் என்கிற இந்தி மொழி நாளின் போது இதேபோல் போராட்டங்கள் கர்நாடகாவில் நடத்தப்பட்டன. கர்நாடகாவில் மத்திய அரசு அலுவலகங்களின் பெயர்ப்பலகைகளில் இருந்த இந்தி எழுத்துகள் தார்பூசியும் கருப்பு மையாலும் அழிக்கப்பட்டன.

இந்த முறையும் இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டத்தை கர்நாடகாவின் கன்னட அமைப்புகள் கையில் எடுத்துள்ளன. தமிழகம், ஆந்திரா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட பிற மாநிலங்களும் இந்த போராட்டத்தில் கை கோர்த்துள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் @JanataDal_S நேற்று முதலே இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கவும் ட்விட்டரில் இதனை டிரெண்டிங்காக்க வேண்டும் என்ற பதிவுகள் இடைவிடாமல் போடப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் கன்னட ரக்‌ஷன வேதிக அமைப்பினர் போராட்டங்களை நடத்தி உள்ளனர். இந்த போராட்டங்களுக்கு கன்னட திரைத்துறையினரும் ஆதரவு தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் #StopHindiImposition என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்காகி வருகிறது. இந்த ஹேஷ்டேக் பதிவில் பல்வேறு மாநிலத்தவரும் இந்தி மொழி திணிப்புக்கு எதிரான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். கர்நாடகாவைச் சேர்ந்த @sandeepkambi என்ற நெட்டிசன், ஹிந்தி திவாஸ் கொண்டாட்டம் என்பது இந்தியர்கள் வெட்கப்பட வேண்டிய நாள் என காட்டமாக பதிவிட்டுள்ளார். பேரறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற கருத்தான, பெரும்பான்மையினர் பேசுவதால் இந்திதான் இந்தியாவின் தேசிய மொழிதான் என்றால் நாட்டின் தேசிய பறவையாக காகம் தான் இருக்க வேண்டும் என்பதும் பல்வேறு மொழிகளில் பகிரப்பட்டு வருகிறது. பீகாரில் மைதிலி மொழி பேசும் நெட்டிசன்கள், தங்கள் மொழிக்கான அங்கீகாரம் இன்னமும் கிடைக்கவில்லை. இந்தியாவின் உலகின் பழமையான மொழிகளில் மைதிலி மொழி முக்கியமானது என்கிற ஆதங்கத்தை கொட்டுகின்றனர். பஞ்சாப் மக்கள் இனியேனும் இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக விழித்துக் கொள்ள வேண்டும் என்ற குரல்களும் பதிவிடப்பட்டு வருகின்றன.


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: