தமிழகத்தில் முதல்முறையாக திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலில் அதிகபட்சமாக பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ 100.04 -க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.
இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை அன்றாடம் நிர்ணயம் செய்கின்றன. தற்போது இதன் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. 5 மாநில தேர்தல்களுக்கு பிறகு மே மாதம் 2ஆவது வாரத்தில் பெட்ரோல்- டீசல் விலை உச்சத்தை தொட்டது. பின்னர் குறைந்தது. இதையடுத்து தற்போது உச்சத்தை தொட்டு வருகிறது.
தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அதிகபட்சமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.04 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் டீசல் விலை ரூ 93.92 பைசாவிற்கும் ஸ்பீடு பெட்ரோலின் விலை ரூ 102.83 பைசாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் முதன்முறையாக பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்தது கொடைக்கானலில்தான். இதனால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளார்கள். கொரோனா ஊரடங்கால் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என கவலை கொண்டுள்ளனர். மேலும் எரிபொருள் விலையை குறைப்பதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தியாவில் ராஜஸ்தானில் வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல் விலையும் டீசல் விலையும் ரூ 100 ஐ தாண்டியுள்ளது. கொரோனா ஊரடங்கால் வேலையிழப்பு, ஊதிய குறைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் இதை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Your reaction