உய்குர் முஸ்லீம்கள் மீதான சீன அராஜகத்தை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் மேகா ராஜகோபாலனுக்கு ‘புலிட்சர்’ விருது!

1147 0


சீனாவில் முஸ்லீம்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்காக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பெண் பத்திரிக்கையாளர் மேகா ராஜகோபாலன் புலிட்சர் விருது பெற்றுள்ளார்.

பஸ்ஃபீட் என்ற செய்தி நிறுவனத்திற்காக இந்த செய்தியை உலக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார் மேகா. சர்வதேச ரிப்போர்ட்டிங் பிரிவில் மேகாவுக்கு புலிட்சர் விருது கிடைத்துள்ளது.

சீனாவின் மேற்கு எல்லையிலுள்ள பகுதி ஜின்ஜியாங். மங்கோலியா, ஆப்கானிஸ்தான் என மொத்தம் 8 நாடுகள் இதனுடன் எல்லையை பகிர்கின்றன. 1949ம் ஆண்டு முதல் ஜின்ஜியாங் பகுதி, சீனாவின் ஆதிக்கத்தின்கீழ் வருகிறது.

ஹாங்காங் போலவே, இதனை சுயாட்சி பகுதியாகத்தான் அறிவித்திருந்தது சீனா. அப்போது அங்கு 95% உய்குர் இன முஸ்லீம் மக்கள் இருந்தார்கள். இந்த பகுதியை கிழக்கு துருக்கிஸ்தான் என்றுதான் அப்போது அழைப்பார்கள். அங்கு முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருப்பது சீனாவின் கண்களை உறுத்திக் கொண்டே இருந்தது. இந்த நிலையில், 2013ல் இருந்து மிக அதிக அளவுக்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.

உய்குர் இனத்தைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் ஆண்கள், முகாம்கள் என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய சிறைச்சாலைகளில் உள்ளனர். முஸ்லீம் பெண்கள், சீன ஆண்களால் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாமை மறக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை படிக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் தொழுகை நடத்தக் கூடாது. எக்காரணம் கொண்டும் அவர்களுக்கு உரித்தான ஆடைகளை அணியக் கூடாது, எக்காரணம் கொண்டும் அரபி மொழியில் பேசக்கூடாது, எக்காரணம் கொண்டும் தொழுகைக்கான பாடல்களைப் பாடக்கூடாது, இப்படி பலவிதமான தடைகள் அங்கே விதிக்கப்பட்டிருக்கிறது.

2017ம் ஆண்டு உலக நாடுகள் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, அவ்வாறான முகாம்களே இல்லை என கூறியது சீனா. அந்த காலகட்டத்தில் மேகா ராஜகோபாலன்தான், முதல் முறையாக அப்படியான ஒரு முகாமுக்கு நேரடியாக சென்று நிலைமையை கண்டறிந்து எழுதி வெளியுலகிற்கு அம்பலப்படுத்தினார்.

இதற்காக அவர் அதிகம் விலை கொடுக்க வேண்டியதாயிற்று. அவரது விசாவை முடக்கிய சீனா, நாட்டிலிருந்தே வெளியேற்றியது. முகாம்கள் அமைந்திருந்த பிராந்தியத்தையே தனிமைப்படுத்தி, வெளியே இருந்து யாரும் போய் பார்க்க முடியாதபடி நடவடிக்கைகளை எடுத்தது சீனா. ஆனால் விடவில்லை மேகா ராஜகோபாலன்.

லண்டனில் இருந்தபடி, சீனாவை அம்பலப்படுத்த ஆதாரங்களை திரட்டினார். தடயவியல், கட்டிடவியல், சாட்டிலைட் படங்களை வைத்து பகுப்பாய்வு செய்யும் வல்லுநரான அலிசன் கில்லிங் மற்றும் டேட்டா சேகரிக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு உதவும் கிறிஸ்டோ பஸ்செக் ஆகிய இருவர் உதவியோடு சீனாவின் தடுப்பு முகாம்களை பற்றி தகவல் சேகரித்தார் மேகா ராஜகோபாலன்.

இதுகுறித்து பஸ்ஃபீட் செய்தி தலைமை எடிட்டர் மார்க் ஸ்கூப் கூறுகையில், நமது சம காலத்தில் நடைபெறும் மிகப்பெரிய மனித உரிமை மீறல், சீனாவின் தடுப்பு முகாம் கொடுமைகள்தான். இதை உலகிற்கு அம்பலப்படுத்த எங்கள் பத்திரிக்கையாளர்கள் பாடுபட்டுள்ளது பாராட்டத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

இத்தனைக்கும் மேகா ராஜகோபாலன், புலிட்சர் விருது விழாவை லைவாக பார்க்கவேயில்லையாம். தனது பத்திரிக்கைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதை தெரிவித்துள்ளார். ஏனெனில் அவர் விருது பெறுவார் என்று அவரே எதிர்பார்க்கவில்லையாம். எடிட்டர் அழைத்து சொன்னபோதுதான், இந்த விவரம் தனக்கு தெரிந்ததாக மகிழச்சி தெரிவிக்கிறார்.

அதேநேரம் இந்த புலனாய்வு கட்டுரைக்கு உதவி செய்த சக பத்திரிக்கையாளர்கள், டேட்டா அலசைசிஸ் செய்வோர் உட்பட பலருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். உய்கூர், கஸாக்ஸ் உள்ளிட்ட முஸ்லீம் இனப் பிரிவினரை அடைத்து வைத்துள்ள இடத்தை கண்டறிய பல்வேறு செயற்கைக்கோள் புகைப்படங்களை தீவிர பகுப்பாய்வு செய்துள்ளது இந்த குழு. இதற்காக சித்தரிக்கப்படாத செயற்கைக்கோள் படத்தை கண்டறியும் சாப்ட்வேர்களையும் பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: