கமிஷன் எனும் ஆக்டோபஸ்! செயற்கையாக உயர்த்தப்படும் விலை! அதிரையில் சொந்த மனை/வீடு சாத்தியமா?

1261 0


தமிழக அரசியலில் கரப்ஷன், கமிஷன், கலெக்சன் என்ற சொல்லாடல் பிரபலம். அதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு அதிரையில் நடக்கிறது கமிஷன் வேட்டை. ஆம், வடிவேல் காமெடியில் வருவதுபோல் அவர்கிட்ட வாங்கியதுக்கு ஏணி சின்னத்துல ஒரு குத்து (ஓட்டு) உன்கிட்ட வாங்கியதுக்கு தென்னமர சின்னத்துல ஒரு குத்து என்ற ரீதியில் இடம் விற்பவரிடம் ஒரு கமிஷன் அந்த இடத்தை வாங்குபரிடம் ஒரு கமிஷன் என இரட்டை கமிஷன்களை வாங்கி பொருளாதார நட்டமில்லா ஒரு செயலை (தொழிலுக்கு அப்பாற்பட்டு) செய்து வருகிறது ஒரு கூட்டம்.

கமிஷன் நபராக செயல்படுபவர் தனது நேரத்தை செலவிட்டு பைக்கு பெட்ரோல் போட்டு விற்காத பொருளையும் விற்றுகொடுத்து தானே தனது உழைப்புக்கு பகிறமாக கமிஷன் பெறுகிறார், இதில் என்ன தவறு இருக்கிறது என பலர் கேட்கலாம்.

உண்மையில் அதற்கான கமிஷனை அந்த பொருளை விற்பனை செய்தவர் இடத்தில் வாங்குவது தானே நியாயம். மாறாக பொருளை வாங்கியவரிடமும் கமிஷன் பெறுவது எந்த வகையை சேர்ந்தது?

அதிரைக்கான ரியல் எஸ்டேட் துறையில் தாங்கள் வைப்பது தான் விலை என்கிற மமதை தலைக்கேறி சிலர் வலம் வருவதை காண முடிகிறது. இதனால் பலருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பணமும் நேர்மையாக பெற வேண்டிய இடமும் கிடைக்காமல் போகிறது. இதில் கொடுமை என்னவெனில் தங்களுக்கு ஒத்துவராத நபரின் இடத்தை அது சரி இல்லை, இது சரி இல்லை என பிரச்சாரம் செய்து அந்த நிலத்தின் விற்பனையை முடக்கும் கேடுகெட்ட செயலையும் மனித உருவில் திரியும் கமிஷன் புரோக்கர்கள் செய்கின்றனர்.

ரியல் எஸ்டேட் கதை இப்படி இருக்க கட்டுமான துறையின் கதையும் ஒரே ஃபார்முலாவை கொண்டுள்ளது. உதாரணமாக வீட்டை தரமாகவும் விலை குறைவாகவும் கட்ட வேண்டும் என நினைக்கும் ஒருவர், தனக்கு தெரிந்த நபரிடம் தான் கட்டுமானத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கி தருவதாகவும் தாங்கள் ஆட்களை வைத்து எனது வீட்டை கட்டி தந்தால் அதற்கு கமிஷனாக குறிப்பிட்ட சதவீதம் கொடுப்பதாக பேசி ஒரு முடிவுக்கு வந்துவிடுகின்றனர். இங்கு இதுவரை பிரச்சனை எழவில்லை, பின்னர் தான் திரைமறைவில் வீட்டு ஓனருக்கே தெரியாமல் கட்டுமான பொருட்களின் டீலரிடம் டீலிங் பேசுகின்றனர் உழைப்பாலேயே முன்னேறிய ஒருசில கமிஷன் மன்னர்கள். அதாகப்பட்டது என்னவெனில் அசல் விலையை கொண்ட பில் மேஸ்திரிக்கு, செயற்கையாக உயர்த்தப்பட்ட விலை பட்டியலை கொண்ட மற்றோரு பில் வாடிக்கையாளருக்கு  சென்று சேரும். இதனால் ஒரே பொருளில் டீலர், வாடிக்கையாளர், செயற்கையாக உயர்த்தப்பட்ட தொகை என ட்ரிப்பில் சைடு கமிஷன்களை வாங்கி அப்படியே வாயுக்குள் போட்டு முழுங்கிவிடுகின்றனர். இதிலும் வயிறு நிரம்பாத சிலர், கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களைவிட அதிகமாக வாங்கி பின்னர் அதை மறைமுகமாக விற்பனையும் செய்துவிடுகின்றனர். இவ்வாறு கட்டடத்துறையில் மூன்று பக்கமும் பம்பரமாய் சுழன்று கல்லாக்கட்டுகின்றனர். சிலர் மேலும் அதிக கமிஷனுக்கு ஆசைப்பட்டு மணல், லேபர், செங்கல் உள்ளிட்ட பொருட்களின் விலையை ஏற்றிவிட்டு கமிஷன் பார்க்கின்றனர். அதாவது கடந்த ஆண்டு ரூ. 700க்கு விற்பனையான மணலுக்கு 10 சதவீதம் கணக்கிட்டால் ரூ. 70 கமிஷனாக கிடைக்கும். அதே தற்போது செயற்கையாக விலை உயர்த்தப்பட்டு ரூ.2500க்கு மணல் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு கமிஷனாக ரூ. 250 கிடைப்பதால் அதன் விலை குறைந்துவிடக் கூடாது என்பதில் சிலர் கண்ணும் கருத்துமாக உள்ளனர். அவர்கள் எல்லாம் உலக வாழ்க்கையை சுவர்க்கமாக கருதுகின்றனர்.

(ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத்துறையில் சிலர் இறைவனுக்கு அஞ்சி முறையாக பேசியபடி நியாயமான கமிஷனை பெறுகின்றனர். அவர்களுக்கும் இந்த பதிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்களின் வியாபாரத்தில் இறைவன் அருள்புரிய வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்.)

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: