வேளாண் சட்டம் குறித்து உச்சநீதிமன்றம் விதித்த உத்தரவை வரவேற்பதாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தெரிவித்தனர்.
ஆனால் வேளாண் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். ஜனவரி 15ம் தேதி மத்திய அரசுடன் திட்டமிட்டப்படி பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அவர்கள் கூறினர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசு அவர்களுடன் 8 கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அது தோல்வியில்தான் முடிந்தது. 3 வேளாண் சட்டங்களை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 4 பேர் கொண்ட வல்லுநர் குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்றுள்ள விவசாயிகள், வேளாண் சட்டத்தை அரசு ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ) செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேளாண் சட்டம் குறித்து உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்கிறோம். இந்த உத்தரவு குறித்து விவாதித்து வருகிறோம். ஆனால் இந்த சட்டத்தை மத்திய அரசு ரத்த செய்யும் வரை எங்களின் போராட்டம் தொடரும்.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்.எஸ்.பி) உத்தரவாதம் அளிக்க ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். உச்சநீதிமன்றம் அமைத்துள்ள பேச்சுவார்த்தை வல்லுநர் குழுவிடம் பேச்சு நடத்துவது தொடர்பாக விவசாயிகளின் மையக் குழுவில் விவாதிக்கப்படும். ஜனவரி 15ம் தேதி மத்திய அரசுடன் திட்டமிட்டப்படி பேச்சுவார்த்தைக்கு செல்வோம். இதேபோல் ஜனவரி 26-ல் குடியரசு தினத்தன்று ஏற்கனவே கூறியபடி டிராக்டர் பேரணி நடைபெறும்.
Your reaction