தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு மதுரை வருகை தந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று, பாஜக, அதிமுக கூட்டணிக்கட்சி வேட்பாளா்களை ஆதரித்து தமிழகத்தின் தேனி மற்றும் ராமநாதபுரத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.
இதற்காக விமானம் மூலம் நேற்று இரவு சுமார் 9.45 மணியளவில், கேரளாவில் இருந்து மதுரை வருகை தந்தார் பிரதமா் மோடி. இதையடுத்து, பசுமலையில் உள்ள தனியாா் விடுதியில் தங்கினார்.
இன்று காலை தேனியில் பிரசாரத்தை தொடங்கும் பிரதமா் மோடி, தேனி தொகுதி அதிமுக வேட்பாளரும் துணை முதல்வர் ஓ.பன்னீா் செலவத்தின் மகனுமான ரவீந்திரநாத் குமார், திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் கே.ஜோதிமுத்து, மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன், விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் ஆர்.அழகர்சாமி ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
இதையடுத்து, ராமநாதபுரம் செல்லும் நரேந்திர மோடி, அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன் (ராமநாதபுரம்), ஹெச்.ராஜா (சிவகங்கை), தமிழிசை சௌந்தரராஜன் (தூத்துக்குடி), புதிய தமிழகம் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி (தென்காசி) ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
இந்த கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, பாமக தலைவர் ஜி.கே.மணி உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்கின்றனர்.
Your reaction