தினமும் ஒரு தகவல்!!

1279 0


கால்சியம் ஏன் தேவை?

பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு.

நரம்பு மண்டலம் சிறப்பாகச் செயல்பட.

உடல் தசைகள் வலுப்பெற.

இதயம் நன்றாக இயங்க.

உடலில் ஹார்மோன்கள் சரியாகச் செயல்பட.

நம் உடல் தனக்குக் கிடைக்கும் கால்சியத்தில் 99 சதவீதத்தைப் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் மீதி ஒரு சதவீதத்தை மற்ற பணிகளுக்கும் செலவிடுகிறது.

கால்சியம் குறைந்தால் என்னவாகும்?

பெண்களின் உடலில் கால்சியம் குறைந்தால் கூன்போடும் பழக்கத்துக்கு மாறுவர். மாதவிடாய் நின்றபிறகு இது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

ஆஸ்டியோபொரோஸிஸ் (Osteoporosis) என்ற எலும்பு சார்ந்த நோய் ஏற்படும். இதனால் எலும்புகள் வலுவிழப்பதால் கீழே விழுந்து அடிபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

குழந்தைகளின் வளர்ச்சியில் எலும்புகள் முக்கியப் பங்காற்றுகின்றன. கால்சியம் குறைவு குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்கும். பற்கள் பாதிக்கப்படும்.

எலும்பின் அடர்த்தி குறைந்து, எலும்பு உடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகள் என்னென்ன?

சோர்வு, கவனக்குறைவு, இணைப்புகளில் வலி, தசைகளில் வலி, மூச்சுத்திணறல், அடிக்கடி உடல் மரத்துப்போதல் போன்றவை.

பால் குடிக்காதவர்கள், கால்சியத்திற்கு என்ன செய்யலாம்?

பால் குடிக்காதவர்களுக்கு, கால்சியம் கிடைக்க ஏராளமான உணவு வகைகள் உள்ளன. அவற்றில் ஏதாவது ஒன்றை, தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது அவசியமாகும்.

தானிய வகைகள்: கேழ்வரகு, சிவப்பு அவல், வரகு, கோதுமை, பனி வரகு.

பருப்பு வகைகள்: கடலைப்பருப்பு, உடைத்த கடலை, கருப்பு உளுந்து, கொள்ளு, ராஜ்மா, துவரம் பருப்பு, பச்சைப்பயறு, பட்டாணி.

கீரை வகைகள்: அகத்திக்கீரை, பருப்புக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, மணத்தக்காளிக்கீரை.

காய்கறிகள்: கேரட், பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பாகற்காய், காலிஃபிளவர், முருங்கைக்காய் , சுண்டைக்காய், வாழைப்பூ.

பழ வகைகள் : கொய்யாப்பழம், நெல்லிக்காய், பேரீச்சம் பழம், திராட்சை, ஆரஞ்சு, பப்பாளி.

இலை வகைகள்: கேரட் இலை, முட்டைகோஸ் இலை, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, காலிஃபிளவர் இலை.

விதை வகைகள்: சூரியகாந்தி விதை, தர்பூசணி விதை, எள்ளு உருண்டை, வால்நட், பாதாம்

இவை தவிர பாதாம், வேர்க்கடலை போன்றவற்றைப் பத்து முதல் பதினாறு மணி நேரம் நீரில் ஊறவைத்து, அரைத்து தேங்காய்ப்பால் தயாரிப்பதுபோல் பிழிந்து, அதனைப் பாலுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். இதன் பச்சையான சுவை பிடிக்காதவர்கள் சூடாக்கிப் பயன்படுத்தலாம்.

கால்சியம் – வைட்டமின் டி தொடர்பு

நாம் எடுத்துக்கொள்ளும் உணவுப் பொருள்களில் இருக்கும் கால்சியத்தை விரைவில் உடல் உறிஞ்சிக்கொள்ள வைட்டமின் டி (Vitamin D) தேவை. இந்த வைட்டமின் டி, சூரிய ஒளியில்தான் அதிகமாக உள்ளது. எனவே, தினமும் சிறிது நேரம் சூரிய ஒளியில் நிற்பது கால்சியத்தின் பயனைப் பெறுவதற்கு முக்கியமாகும்.

பால் குடித்தால் மட்டும்தான் கால்சியம் கிடைக்கும் என்பது தவறான நம்பிக்கை. பாலில் இருப்பதை விட அதிகக் கால்சியம் மற்ற பொருள்களில் இருக்கிறது. குறிப்பாக, அகத்திக் கீரையில் கால்சியத்தின் அளவு மிக அதிகம். பால் குடிக்கும்போது கிடைக்கும் கால்சியம், நமது உடலால் மிக வேகமாக உறிஞ்சப்படுகிறது என்பதால்தான், பால் பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது, கண்டிப்பாகப் பால் குடிக்கவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.

 

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: