18வது நூற்றாண்டில் மைசூர் மாகாணத்தை ஆண்டு வந்தவர் மன்னர் திப்பு சுல்தான். இவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கடும் போர் செய்தார். மேலும் வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பணமாகவும் விளங்கினார்.
18வது நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கு எதிரான போரில் ஏவுகணை மூலம் 2 கி.மீ தூரம் வரை செல்லும் திப்பு பயன்படுத்திய பீரங்கி குண்டுதான், இன்றைய ராக்கெட் தொழில்நுட்பத்துக்கான முன்னோடி’ என்று உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு நிறுவனம் புகழ்கிறது. 49 வயது வரை வாழ்ந்த திப்புவின் நிர்வாகத்தை, இன்று வரை உலகம் கொண்டாடுகிறது.வரலாற்றில் ஓர் அரசர், அளவுக்கு மீறிப் புகழப்படுபவராகவும் அல்லது கொடுங்கோலராகவும் காட்டப்படுவார்கள். திப்புவின் வரலாறோ, இரண்டையும் கொண்டுள்ளது. ஒரு சாரார் திப்புவின் செயல்பாடுகளை விமர்சித்தாலும், தொடர்ந்து திப்பு சுல்தான் எப்படிப்பட்டவர் என்ற ஆதாரம் வரலாறு முழுக்கப் படர்ந்து கிடக்கிறது.
இந்நிலையில் கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்ற போது, திப்பு சுல்தான் ஜெயந்தி(பிறந்த தினம்) என்பது அரசு சார்பிலான விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்து செயல்படுத்தினார். அப்போது முதலே, பாரதிய ஜனதா கட்சி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
திப்பு பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட கூடாது என்பது அவர்கள் கோரிக்கை. ஆனால் திப்புவின் சுதந்திர போராட்ட தியாகத்தை பாஜக கொச்சைப்படுத்துவதாக கூறி, பலத்த பாதுகாப்புக்கு நடுவே அரசு விழாவாக சித்தராமையா அரசு நடத்த துவங்கியது.
தற்போது காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசில், முதல்வராக குமாரசாமி பதவி வகித்து வரும் நிலையில், இந்த ஆண்டும் அரசு விழாவாக திப்பு ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதை எதிர்த்து பாஜக மற்றும் இந்து அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
போராட்டங்களையடுத்து பெங்களூரில் சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கலவரங்களுக்கு பெயர்பெற்ற மங்களூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும், குடகு மாவட்டத்திலும், பாஜக மற்றும் இந்து அமைப்பினர் தீவிரமாக போராட்டம் நடத்தினர். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவின் 9 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். திப்புவின் பிறந்த நாள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Your reaction