நள்ளிரவில் நடந்த ஓர் நாடகம் ! #Demonitisation

1345 0


பணமதிப்பு நீக்க அறிவிப்பும், அதன் பின்னான அரசின் மற்ற தொடர் அறிவிப்புகளும் துவக்கம் முதலே ஒன்றுக்கொன்று முரணானவையாகவே இருந்துள்ளன. இந்த முரண்பாடுகள் ‘பண மதிப்பு நீக்கம் தெளிவில்லாமல் அறிவிக்கப்பட்ட அறிவிப்பா ?, ஆழம் தெரியாமல் காலைவிட்டதா மத்திய அரசு ?’ என்ற கேள்விகளையே மக்கள் முன் அன்றும் இன்றும் தொடர்ந்து எழுப்புகின்றன.

கறுப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகச் சொல்லி, புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் செல்லாததாக அறிவித்த கையோடு, புதிய 2000 ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பை அதே மேடையில் மோடி அறிவித்தது உலக பணத்தாள் வரலாறு ஒருபோதும் காணாத முரணாக இருந்தது. அமெரிக்க பணமதிப்பு நீக்கத்தின் வெற்றியே அங்கு உயர் பணமதிப்பு நோட்டுகள் ஒரேயடியாகக் கைவிடப்பட்டதுதான். 1000 ரூபாயை ஒழித்து 2000 ரூபாயைக் கொண்டுவருவது என்பது நெருப்புப் பொறியை கொள்ளிக் கட்டையால் அணைக்கும் கதைதான்.

தவிர, இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டுக்கு 2000 ரூபாய் பணத்தாள் தேவையா என்பதே மிகப்பெரிய கேள்வி. 2015 ஆம் ஆண்டின் நிலவரப்படி நம்நாட்டின் பொதுமக்களில் 69 சதவிகிதம் பேர் கிராமப்புறம் மற்றும் சிறுநகரப் பகுதிகளில்தான் வசிக்கிறார்கள். அவர்களில் 75 சதவிகிதம் பேர் நாள் ஒன்றுக்கு 33 ரூபாய் சம்பாதிக்கும் சாதாரண மக்கள். பெரும்பாலானோர் தினக் கூலிகள். மாதம் ஒன்றுக்கு இவர்களது அடிப்படை வருமானம் 5,000 ரூபாய். மீதம் இருக்கும் 25% பேர்தான் நகரத்தில் வசிக்கிறார்கள்.அவர்களில் கூட பலருக்கு 2000 ரூபாய்க்கு செலவோ வரவோ தினசரி இருக்கப்போவது இல்லை. இந்நிலையில் யாருக்காக 2000 ரூபாய் பணத்தாள்? – என்ற கேள்விக்கு அப்போது யாரிடமும் பதில் இல்லை.

இன்னொரு பக்கம் பணமதிப்பு நீக்கத்தின்போது பிரதமர் மோடி சொன்னபடி நவம்பர் 11 முதல் ஏ.டி.எம்.களில் மக்களுக்குப் புதிய பணம் கிடைக்கவில்லை. புதிய பணத்தாள்களின் அளவு பழைய தாள்களில் இருந்து மாறுபட்டு இருந்ததால், அவற்றை பழைய ஏ.டி.எம்.களில் வைக்க முடியவில்லை. இதனால் ஒவ்வொரு ஏ.டி.எம். இயந்திரத்திலும் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. புதிய பணத்தாள்களின் அளவு பழைய பணத்தாள்களின் அளவை ஒத்து இருந்திருந்தால் இந்தச் சிக்கலே ஏற்பட்டு இருக்காது.

அந்தச் சிக்கல் மேலும் எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என்று மக்களுக்குத் தெரியாத சூழலில் நவம்பர் 13ல்தான் நிதியமைச்சர் ஜேட்லி ‘ஏ.டி.எம்.கள் அனைத்தும் பயன்பாட்டுக்கு வர இன்னும் 3 வாரங்கள் ஆகும்’ என திருவாய் மலர்ந்தார். நவம்பர் 30க்குள் அனைத்து ஏ.டி.எம்.களும் மாற்றம் செய்யப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் டிசம்பர் 02ஆம் தேதி வரை 90% ஏ.டி.எம்.கள் மட்டுமே மாற்றம் பெற்றன. மீத 10% ஏ.டி.எம்.களை மாற்ற இன்னொரு 10 நாட்கள் இலக்கு வைக்கப்பட்டது. மேலும் புதிய பணத்தாள்களுக்கு ஏற்ப மாற்றப்பட்ட ஏ.டி.எம்.களிலும் பணம் உடனுக்குடன் தீர்ந்ததால் அவற்றை நிரப்பவும் ஆட்கள் போதிய அளவில் இல்லை.

இதனால் புதிய பணம் கிடைக்கும் வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் மக்கள் வரிசைகள் கிலோமீட்டர் கணக்கில் நீள, வங்கி வரிசை சாவுகள் நாடெங்கும் நிகழ்ந்தன. அப்போது 105 வங்கிவரிசை சாவுகள் ஊடகங்களால் கணக்கிடப்பட்டன, கணக்கிற்கு வராதவை இன்னும் நிறைய இருக்கும். இவர்களின் மரணங்களுக்கு அரசு எந்த இழப்பீடும் கொடுக்கவில்லை. தவிர ஏ.டி.எம்.களை நம்பி அரசு பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தது ஒரு மிகப்பெரிய பாரபட்ச நடவடிக்கையாக இருந்தது.

ஏனெனில் 2016 ஜூன் மாத கணக்கெடுப்பின்படி இந்திய ஏ.டி.எம்.களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரம்தான். பணமதிப்பு நீக்கத்தை மோடி அறிவித்தபோதும் இவ்வளவு ஏ.டி.எம்.கள்தான் இருந்தன. அவற்றிலும் 40,000 ஏ.டி.எம்.கள் ஒரு தனியார் நிறுவனத்தின் உட்பிரச்னைகளால் மூடப்பட்டு செயல்படவில்லை. அப்போது செயல்பாட்டில் இருந்தவை ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஏ.டி.எம்.கள்தான்.

இந்த ஏ.டி.எம்.களையும் அவற்றின் அமைவிடங்களை அடிப்படையாக வைத்துப் பிரித்தால், ஒருபக்கம் 8 மெட்ரோ நகரங்கள் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் மட்டும் 56 ஆயிரம் ஏ.டி.எம்.கள் இருந்திருக்கின்றன. இன்னொரு பக்கம் இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்களின் மக்கள் அனைவருக்குமாக 40 ஆயிரம் ஏ.டி.எம்.கள் மட்டுமே இருந்து உள்ளன. பண மதிப்பு நீக்கத்தின் போது கிராமப்புற பொருளாதாரம் சீரழிந்ததற்கு இதுவும் ஒரு பிரதான காரணமாக இருந்தது. கிராமப்புற மக்களுக்கு அஞ்சல் நிலையங்கள் போன்றவற்றில் அரசு மாற்று ஏற்பாடுகளைச் செய்திருந்தால் நிலைமை மாறி இருக்கக் கூடும்.

பணமதிப்பு நீக்கம் வந்தால் என்ன என்ன விளைவுகள் எல்லாம் ஏற்படும் என்று அரசுக்கு தெளிவான திட்டங்கள் இல்லாதது துவக்க நாட்களில் பல வகைகளிலும் வெளிப்படையாகத் தெரிந்தது. உதாரணமாக பணமதிப்பு நீக்கத்தின் முதல் 50 நாட்களில் ரிசர்வ் வங்கி அடுத்தடுத்து 74 அறிவிப்புகளை வெளியிட்டது. இந்த அறிவிப்புகளிலும் தெளிவு இல்லை என்பது வேறு கதை.

அடுத்துவந்த டிசம்பர் 1ல் இந்தியாவெங்கும் மாத சம்பளக்காரர்கள் பெரும் சிக்கல்கலை சந்தித்தனர். இந்தியாவில் 90சதவிகிதம் பேர் ஊதியத்தை ரொக்கமாக வாங்குபவர்கள்தான் எனும்போது பணமதிப்பு நீக்கம் மிகப்பெரிய பொருளாதாரப் பிரச்னையாக மாறியது, இதற்கான எந்தத் தீர்வும் அரசிடம் இல்லை. ஆனால் அரசு ஊழியர்களையும் அதனால் கைவிட முடியவில்லை. இதனால் புதிய மாதம் பிறந்தபோது மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் மாத முன்பணம் கொடுத்தது. இப்படிப் பணம் பெற்ற ஊழியர்கள் நாட்டின் 5சதவிகிதம் பேர்தான், அப்போது மீதம் 95சதவிகிதம் பேருக்கு யார் முன்பணம் கொடுப்பார்கள்? எப்படிக் கொடுப்பார்கள்? – அரசுக்குத் தெரியவில்லை. இந்திய ரயில்வேயிடம் கூட அப்போது பணம் இல்லை, டிக்கெட் கேன்சல் செய்தவர்கள் காத்திருப்பில் போடப்பட்டனர். அப்போது பிற போக்குவரத்துகளின் நிலை? – அதையெல்லாம் அரசு யோசிக்கவில்லை.

மேலே கூறியவை சில உதாரணங்கள்தான், இப்படிப்பட்ட நூற்றுக் கணக்கான சிக்கல்கள் பணமதிப்பிழப்பின் போது தோன்றின. இவற்றை அரசு எதிர்பார்த்து இருக்கவும் இல்லை, திரும்பிப் பார்த்து உதவவும் இல்லை என்பது பணமதிப்பு நீக்கத்தின் மிகக் கோரமான முகம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: