அதிரை எக்ஸ்பிரஸ்:- பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயலக குழு திண்டுக்கல் மாவட்டத்தில் 23.04.18 அன்று மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயில் அவர்களின் தலைமையில் கூடியது. இந்தக் கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
வளம் கொழிக்கும் தமிழகத்தை பாலைவனமாக மாற்றும் செயல் திட்டங்களை மத்தியில் பா.ஜ.க அரசு பொறுப்பேற்றதிலிருந்து செயல்படுத்தி வருகின்றது. நியூட்ரினோ, மீத்தேன், கெயில் போன்ற இயற்கை வளங்களை அழிக்கும் செயல் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முனைப்பு காட்டி வருகின்றது. இந்த மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து அறவழியில் போராடுபவர்கள் மீது கடும் அடக்கு முறைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. தமிழக விவசாயத்தின் உயிர்நாடியாக விளங்கக்கூடிய காவிரி நதி நீர் பங்கீடு குறித்து உச்ச நீதிமன்றமே மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட பின்பும் அரசியல் ஆதாயத்திற்காகவும், தமிழக மக்களை வஞ்சிக்கும் நோக்கத்துடனும் மத்திய அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகின்றது. தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தக் கோரியும் தமிழகம் முழுவதும் தொடர்ந்து அறவழியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதற்காக நடைபெறும் போராட்டங்களுக்கு மாநில அரசு தார்மீக ஆதரவை வழங்கியிருக்க வேண்டும். மாறாக அறவழி போராட்டங்களை முடக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் மூலம் தமிழக உரிமையை நிலைநாட்ட முடியாத சூழலை தமிழக அரசே உருவாக்கி வருகின்றது என்பது வேதனையான விஷயமாகும். மனித நேய ஜனநாயக கட்சியின் பொருளாளர் ஹாரூன் ரசீத், நடிகர் மன்சூர் அலிகான், தமிழக வாழ்வுரிமை கட்சியினர் என பல்வேறு அமைப்பை சார்ந்த நபர்கள் காவிரி மேலாண்மை வாரியம் வேண்டி நடைபெற்ற போராட்டங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது அப்பட்டமான ஜனநாயக படுகொலை ஆகும். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருப்பது உள் நோக்கம் கொண்டதாகவே உள்ளது.
தமிழகத்தின் உரிமைகளுக்காக அறவழியில் போராடுபவர்களை சிறையில் அடைப்பதை தமிழக அரசு உடனே நிறுத்த வேண்டும், ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும். கைது செய்யபட்டவர்கள் உடனே விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்டின் செயலக குழு கேட்டுக் கொள்கின்றது.
இப்படிக்கு
ஆ.ஹாலித் முகமது,
மாநில பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு
Your reaction