இந்தியாவில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதிலிருந்தே ரொக்கப் பணப் புழக்கம் குறைந்து டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. கையில் உள்ள ஸ்மார்ட்போன் மூலமாகவே பணம் அனுப்பவும், பணம் பெறவும் முடிகிறது. இதற்காக வங்கிக்கு அலைய வேண்டிய தேவை இப்போது இல்லை. இதற்காகவே கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே போன்ற ஏராளமான மொபைல் செயலிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இதில் கேஷ் பேக் போன்ற பல்வேறு சலுகைகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இந்த செயலிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இன்னுமொரு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஆப் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மெஷின்களில் ஏடிஎம் கார்டு இல்லாமலேயே இந்த ஆப் மூலமாகப் பணம் எடுக்கலாம். ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை ஏற்கெனவே சில வங்கிகள் கொண்டுவந்துள்ளன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ ஆகிய வங்கிகளில் இந்த வசதி உள்ளது. ஆனால், இந்த வங்கிகளின் பிரத்தியேகமான மொபைல் ஆப்களின் மூலமாகவே பணம் எடுக்க முடியும். ஆனால் இனி வாடிக்கையாளர்கள் கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே போன்ற ஆப்களைப் பயன்படுத்தி பணம் எடுக்கலாம்.
இந்த வசதி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. ஆனால் இதற்கு வாடிக்கையாளர்கள் தங்களது கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும். 2022 ஏப்ரல் மாதத்தில் இந்த வசதி பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
Your reaction