‘கேரளாவில் படித்த மக்கள் அதிகம் ; அதனால் பாஜக வளரவில்லை’ – பாஜக எம்எல்ஏ அதிரடி பேட்டி !

802 0


கேரளாவில் மக்களிடையே கல்வி அறிவு அதிகமாக இருப்பதால்தான் பாஜக வளர முடியவில்லை என்று அந்த கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஓ.ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தைப் போலவே, ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில்தான் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் அந்த மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு பாஜக எம்எல்ஏவான ராஜகோபால் இடம் பேட்டி கண்டுள்ளது.

அப்போது அவரிடம் ஹரியானா, திரிபுரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக வளர்ச்சி அடைய முடிந்துள்ளது. ஆனால் கேரளாவில் பாஜக வளர முடியவில்லையே ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்துள்ள ராஜகோபால், கேரளாவில் 90 சதவீத மக்களுக்கு கல்வியறிவு இருக்கிறது. அவர்கள் விவாத பூர்வமாக சிந்திக்கிறார்கள். தர்க்கரீதியாக யோசிக்கிறார்கள். கல்வி அறிவு கொண்டவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். பாஜக கேரளாவில் வளர முடியாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

அதுமட்டுமல்ல, கேரளா தனித்துவமான ஒரு மாநிலமாக இருக்கிறது . இங்கே 55 சதவீதம் இந்துக்கள் இருக்கிறார்கள். 45 சதவிகிதம் சிறுபான்மையினர் இருக்கிறார்கள். ஒரு பெரிய மாநிலத்தில் இதுபோல அதிக அளவுக்கு சிறுபான்மையினர் வசிப்பது கேரளாவிலாகத்தான் இருக்க முடியும்.
இதுவும் பாஜக வளர முடியாமல் இருப்பதற்கு ஒரு காரணம். எனவே பிற மாநிலங்களுடன் கேரளாவை ஒப்பிட முடியாது. பாஜக மெதுவாகத்தான் வளர முடியும். இவ்வாறு ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

மதம் என்பதை மட்டுமே முன்னிறுத்தி வாக்குகளை கேட்பதாலும், பாகிஸ்தான் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி வாக்குகள் கேட்பதாலும் நடப்பு விவகாரங்களை மறந்துவிட்டு வட இந்தியாவில் பாஜகவுக்கு மக்கள் ஓட்டுப் போடுகிறார்கள் என்பது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டாக இருக்கிறது. இப்போது கேரளாவைச் சேர்ந்த அந்த கட்சி எம்எல்ஏ ஒருவர், படித்து யோசிப்பதால்தான் கேரளாவில் பாஜக பெரிதாக வளர முடியவில்லை என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் தற்போது பினராய் விஜயன் தலைமையில் இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு முந்தைய பல்வேறு கருத்துக்கணிப்புகள் மீண்டும் அவரது ஆட்சி தான் அமையப் போகிறது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கூட்டணி இரண்டாவது இடத்தைதான் பிடிக்க முடியும் என்று அந்த கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. பாஜக அங்கு சீனில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: