தமிழ்நாடு குண்டர்கள் தடுப்பு சட்டம் என்றால் என்ன ?

912 0


“தமிழ்நாடு குண்டர்கள் தடுப்பு சட்டம்”

இச்சட்டத்தின் சரியான பெயர், “தமிழ்நாடு கள்ளாச்சாராயம் காய்ச்சுவோர், இணையவெளிச் சட்டக் குற்றவாளிகள் (Cyber law offender), போதைப் பொருள் குற்றவாளிகள் (Drug offender), வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் திருட்டு குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசை நில அபகரிப்பு குற்றவாளிகள் மற்றும் ஒளிக்காட்சி திருட்டு (திருட்டு VCD) குற்றவாளிகள் ஆகியோர்களின் அபாயகர செயல்கள் தடுப்புச் சட்டம், 1982” ஆகும்.

சட்டத்தின் நோக்கம் :

மேலே விவரிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் அபாயகரமான செயல்பாடுகளினால் மாநிலத்தில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படாமல் தடுத்து அமைதியை நிலைநாட்ட இதில் கூறியுள்ள குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து பிணையில் வர முடியாதவாறு சிறையில் அடைக்கும் நோக்கத்தில் 1982-ல் தமிழக அரசால் இயற்றப்பட்டதுதான் இச்சட்டம். இது 1982-ம் ஆண்டு மார்ச்சு திங்கள், 12-ம் நாள் இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றாலும், 1982-ம் ஆண்டு சனவரி திங்கள், 5-ம் நாள் முதல் செயல்பாட்டிற்கு வந்ததாக கருதப்படும்.

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கிற முறையில் செயல்படுதல் என்பதாவது :

ஒரு நபர் இச் சட்டத்தில் விவரிக்கப்பட்டுள்ள குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கவோ அல்லது ஈடுபடுவதற்கு ஆயத்த நடவடிக்கைகளை செய்திருக்கவோ வேண்டும்,
மேலும் அவரது செயல் பொது அமைதியை மிகவும் பாதிக்கிறதாகவோ அல்லது மிகவும் பாதிப்பதாக தோன்றக்கூடியதாகவோ இருக்க வேண்டும்.

இதற்கான மேலும் விளக்கம் யாதெனில் :

●யாதொரு நபர்களின் செயல் நடவடிக்கைகளில் ஏதேனும் ஒன்று, நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ,

●பொதுமக்களிடையில் அல்லது அவர்களின் ஒரு வகையினர் மத்தியில் கெடுதல் விளைவிப்பதாகவோ அல்லது கெடுதல் விளைவிக்க திட்டமிடலாகவோ அல்லது பயமுறுத்துவதாகவோ அல்லது எச்சரிப்பதாகவோ அல்லது ஒரு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்துவதாகவோ அல்லது

●வாழ்க்கைக்கு அல்லது பொது சுகாதாரத்திற்கு அல்லது சுற்றுச்சூழல் அமைப்பிற்கு கொடிய அல்லது பெருவாரியான அச்சுறுத்தலாக இருக்கும் பட்சத்தில் அது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கிற முறையில் செயல்படுதல் ஆக கருதப்படும்.

குண்டர் :

ஒரு நபர் தாமாகவோ அல்லது ஒரு கூட்டத்தில் ஒருவராகவோ அல்லது ஒரு கூட்டத்தின் தலைவராகவோ இருந்து கீழ்காணும் குற்றங்களை செய்தவராகவோ அல்லது செய்வதற்கு முயற்சித்தவராகவோ அல்லது செய்வதற்கு உடந்தையாக இருந்திருப்பின் அவர் குண்டர் என்று கருதப்படுவார்.

குண்டர் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் :

அ. இதன் படி கைது செய்யப்பட்டு சிறையில் அடக்கப்படுவர் பிணையில் வரமுடியாது.

ஆ. அதிக பட்சமாக 12 மாதங்கள் தடுப்பு காவலில் வைக்கப்படுவர்.

இ. ஆணையினை எதிர்த்து பாதிக்கப்பட்டவர் ஆலோசனை குழுவிற்கு மேல் முறையீடு செய்யலாம். ஆலோசனை குழுவில் ஒரு தலைவர் மற்றும் இரு உறுப்பினர்கள் இருப்பார்கள். இவர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக இருப்பவர் அல்லது இருந்தவர் அல்லது உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட தகுதியானவராக இருப்பார்கள்.

ஈ. கைது செய்யப்பட்டவருக்காக ஆலோசனை குழு தொடர்புடைய நடவடிக்கைகளில் வழக்கறிஞர் ஆஜர் ஆக முடியாது. அவரோ, அவரது உறவினர் அல்லது நண்பரோ முறையிடலாம்.

உ. ஆலோசனை குழுவின் அறிக்கை அல்லது நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம்.

ஊ. தடுப்பு காவல் ஆணையினை மாநில அரசு எச்சமயத்திலும் ரத்து செய்யலாம்.

எ. காவலில் வைக்கப்பட்டவர்களை நிபந்தனையுடனோ நிபந்தனையின்றியோ தற்காலிகமாக விடுதலை செய்யவும், தடுப்பு காவல் ஆணையினை ரத்து செய்யவும், மாற்றவும், மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.

ஏ. தற்காலிக விடுதலை ரத்து செய்யப்பட்டதின்பேரில் அல்லது நிபந்தனைகள் படி சரணடைய தவறினால், இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: