கர்நாடகா போல தமிழ்நாட்டுக்கு தனி கொடி!

691 0


கர்நாடகா போல தமிழ்நாட்டுக்கு தனி கொடியை பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மாநிலம் உதயமான நவம்பர் 1-ந் தேதியன்று இப்புதிய கொடியை தமிழகம் முழுவதும் ஏற்றி கொண்டாட வேண்டும் என்றும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது

இது தொடர்பாக பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை: 1956 மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடும் மாநிலமாக அடையாளப்பட்டது.. சில இயக்கத்தினர் அண்மை ஆண்டுகளாகத் தமிழ்நாடு மாநிலமாக உருக்கொண்ட நாளை விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.. தமிழ்நாடு முழுமையான தன்னாட்சி அதிகாரத் தன்மையில் ஓர் அரசைக் கொண்டிராத நிலையில், ஒரு மொழி மாநிலமாக மட்டுமே அமைந்து விட்டதே என்கிற நிறைவின்மையால்தான்..

தமிழ்நாட்டு விடுதலை உரிமையில் நாட்டம் கொண்ட பல்வேறு தமிழ்த் தேச இயக்கத்தினர் நவம்பர் ஒன்றாம் நாளாகிய தமிழ்நாடு மாநிலம் உருப்பெற்ற நாளைக் கொண்டாடும் முனைப்பைக் கடந்த காலங்களில் கொண்டிருக்கவில்லை..ஆயினும், அண்மைக்காலத்தில் மொழித் தேச மாநில உரிமைகள் பறிக்கப்பட்டும், மொழி மாநில அடையாளங்கள் சிதைக்கப்பட்டும் வரும் சூழலில் தமிழ்நாடு மொழி மாநிலமாக அடையாளப்பட்டுள்ள நாளைத் தமிழர்கள் மனத்தில் பதியவைத்திடவும், அதன்வழித் தமிழ் மொழி, இன, நாட்டுணர்வூட்டத்திற்கு வழி அமைத்திட வேண்டுவதும் தேவையாகின்றது.. தமிழ்நாட்டை அடையாளப்படுத்துவதும், தமிழ்நாட்டிற்கென ஒரு கொடியை அடையாளப்படுத்துவதும் காலத்தின் தேவைக்குரியதாகிறது..

150 இயக்கங்கள்
150க்கும் மேற்பட்ட இயக்கங்களுடன் ஆலோசனை
மொழி மாநில அளவில் வலிமையான ஒரு கட்சி இல்லாத கருநாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களிலேகூட அந்தந்தமொழி மாநிலங்களுக்கு எனத் தனித்த ஒரு கொடியை அடையாளப்படுத்தி ஏற்றுக்கொண்டு உயர்த்திப் பிடித்து வரும் சூழலில், தமிழ்நாட்டிற்கென ஓர் அடையாளக் கொடி ஒன்றை உருவாக்கி அடையாளப்படுத்த வேண்டுமெனப் பல ஆண்டுகளாகவே முயற்சி முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.. அண்மையில், ஓர் ஆண்டுக்காலமாகப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பில் உள்ள 150க்கும் மேற்பட்ட இயக்கங்களிடையே கருத்துக்கேட்பு நடத்தி, விரிவான ஆய்வுகள் செய்து, இறுதியாக வேறு எந்தச் சார்பு அடையாளங்களுக்கும் உட்படாத வகையில் தூய வெண்ணிறக் கொடியில், எழுச்சியின் அடையாளமாகச் சிவப்பு நிறத்தில் தமிழ்நாடு படத்தை உள்ளடக்கிய கொடி உருவாக்கப்பட்டதும்.. அக்கொடியை வரும் நவம்பர் ஒன்றாம் நாள் தமிழ்நாடெங்கும் ஆயிரக் கணக்கான இடங்களில் ஏற்றி விழாவாகக் கொண்டாடுவது என்றும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பிலுள்ள 150க்கும் மேலான அமைப்புகள் ஒருங்கிணைந்து முடிவெடுத்திருக்கின்றன..

முன் முயற்சி
தமிழ்நாட்டுக்கான கொடி அறிமுகம்
இந்தக் கொடிதான் தமிழ்நாட்டிற்கான கொடியாக இருந்தாக வேண்டும் என்பதோ, இந்தக் கொடியைத்தான் தமிழ்நாட்டின் கொடியாகத் தமிழ்நாட்டு அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதோ பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் விடாப்பிடியான கருத்து அல்ல.. காலத்தின் தேவை கருதி.. பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தமிழ்நாட்டுக் கொடியாக இக்கொடியை மிக விரிவானக் கலந்தாய்வோடு முடிவெடுத்து அறிவித்திருக்கிறது.. இதைவிடச் சிறந்ததொரு கருத்து அடையாளத்தோடு ஒரு கொடி உருவாக்கப்பட்டுத் தமிழ்நாட்டு மக்களால், இயக்கங்களால் ஏற்கப்படுமானால், அக்கால் திறந்த மனத்தோடு கலந்தாய்ந்து தமிழ்நாட்டோடு ஒட்ட ஒழுகும் பண்பு கொண்டதாகவே பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் இருப்பர்.. என்று மாற்றுக் கருத்துடையோர்க்கும் கூறிக்கொள்கிறோம்.. தமிழ் நாட்டு உணர்வாளர்கள்.. ஒரு புள்ளியில் இணைந்து அணி சேர வேண்டிய கடமையைப் பெரியாரிய உணர்வாளர்கள் யாரினும் கூடுதலாகவே உணரவும், தோழமையோடு ஒருங்கிணையவும் முன்நிற்கிறார்கள் என்று சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது இல்லை..

பொதுவான தமிழ்நாட்டு கொடி
தமிழ்நாட்டுக்கான கொடியை ஏற்றுவோம்
எனவே, பேரெழுச்சியோடு இயங்கி வரும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் முன் முயற்சியில் முன்னெடுக்கப்படும் தமிழ்நாடு விழா நிகழ்ச்சியில் தமிழர்கள் அனைவரும் இணைந்து கொண்டாட வேண்டுமென்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அனைவரையும் அழைக்கிறது.. தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான தமிழ் நாட்டுக் கொடியை ஏற்றுவதிலாவது அனைவரும் ஓரணியாய் இணைந்து நின்று கொடி ஏற்றி வீறு முழக்கமிடுவோம் வாருங்கள்.. என அனைவரையும் அழைக்கிறது.. வாருங்கள்.. நவம்பர் 1 அன்று தமிழ்நாடு விழா கொண்டாடுவோம்!.. தமிழ்நாடெங்கும் தமிழ்நாட்டுக் கொடியேற்றுவோம்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: