“அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்” – ஐகோர்ட் கிளை சரமாரி விளாசல் !

649 0


சென்னையை சேர்ந்த சூரியபிரகாசம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது. ஆனால் விவசாயிகள் இன்னும் ஏழைகளாவே உள்ளனர்.

விவசாயிகள் விளைவிக்கும் நெல் கொள்முதல் நிலையம் மூலம் நெல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நெல் அதிகமாக விளையும் டெல்டா பகுதிகளில் நெல்லை விற்க 10, 15 நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் நெல் முழுவதும் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் சாலையில் கிடக்கும் நிலை உள்ளது.

எனவே தமிழகம் முழுவதும் போதுமான நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்தும், நெல் கொள்முதல் செய்ய தாமதம் ஆனால் விவசாயிகளுக்கு உரிய தங்கும் வசதி ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “விவசாயிகள் இரவு பகல் பாராமல் விவசாயம் செய்து பிறருக்கு உணவூட்டி வருகிறார்கள்.

ஆனால் விவசாயிகள் உற்பத்திப் பொருட்களை சரியான நேரத்தில் விற்பனை செய்ய இயலாத காரணத்தால் சாலைகளில் இரவு பகலாக காத்து கிடக்கின்றனர். அதேபோல் வறுமையில் சிக்கி தற்கொலை செய்து கொள்கின்றனர். எனவே அரசு விவசாயிகளுக்கு உரிய கவனம் செலுத்த வேண்டும்.

உற்பத்தி செய்த பொருட்களை விற்க முடியாமல் ஒரு பக்கம் இருக்கக்கூடிய சூழலில் இந்த பொருட்களை விற்பனை செய்ய அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறுவது வேதனையானது. ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் பிச்சைக்காரர்களுக்கு சமமானவர்கள்.

மேலும் கூட்டுறவு ஆலைகளில் போதுமான பாதுகாப்பு ஈரம் புகாமல் தடுக்கக்கூடிய பாதுகாப்பு கிடைப்பதில்லை. இதன் காரணமாக விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களை குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்கக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

விவசாயிகளிடம் குறைந்த விலையில் கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்கள் அரசிடம் அதை அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கின்றனர். விவசாயிகள் கொண்டுவரும் ஒரு நெல்மணி முளைத்து வீண் போனாலும் அதற்கு காரணமான கொள்முதல் நிலைய அதிகாரியிடம் அதற்கான பணத்தை வசூலிக்க வேண்டும்.

தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகள் பாதிக்கப்படாமல் அவர்களிடமிருந்து நெல் கொள்முதல் குறித்த நடவடிக்கைகளை அரசு எதுவும் மேற்கொண்டதாக தெரியவில்லை.

இதுமட்டுமின்றி விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளுக்கு ஒரு மூட்டைக்கு ரூபாய் 40 ரூபாய் லஞ்சமாக அரசு அதிகாரிகள் பெற்று வருகின்றனர். மேலும் முறையான கொள்முதல் செய்யப்படவில்லை என்ற விவசாயிகளின் போராட்டத்தை நாள்தோறும் தொலைக்காட்சிகளில் பார்க்க முடிகிறது. இதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசு விரைந்து எடுப்பது அவசியம்.” எனத் தெரிவித்தனர்.

மேலும், தமிழகத்தில் எத்தனை நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன? விவசாயிகள் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும் நெல் மூட்டைகள் பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுக்குப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இந்த வழக்கில் நுகர்பொருள் வாணிப கழக இயக்குநரை தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக இணைத்து இதுகுறித்து நாளை உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: