இந்து முறைப்படி மசூதியில் திருமணம்!! இந்தியாவைத் திரும்பிப் பார்க்கவைத்த கேரள தம்பதி!!

840 0


கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஞ்சு. சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தையை இழந்த அஞ்சுவுக்கு, 2 சகோதரிகளும் உண்டு. கணவரை இழந்து பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வந்த அஞ்சுவின் தாய் பிந்து தனது மகள் திருமணத்திற்கு நிதி உதவி செய்ய வேண்டும் என, செருவல்லி பகுதியில் உள்ள மசூதி நிர்வாகத்தை நாடியுள்ளார். அதனை பரிசீலித்த மசூதி நிர்வாகம், நிதி உதவி செய்ய சம்மத்தித்ததோடு, மசூதியிலேயே திருமணத்தை நடத்திக் கொள்ளவும் அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து பிந்துவின் மகள் அஞ்சுவிற்கும், சரத் என்ற இளைஞருக்கு திருமணம் நிச்சயமானது.
இதையடுத்து செருவல்லி மசூதி வளாகம் திருமண மண்டபமாக உருமாறியது. தென்னைக் குலைகளுடன் வாழை மரங்கள் நடப்பட்டு பந்தல் போடப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.15 மணிக்கு இந்து முறைப்படி குத்துவிளக்கு ஏற்றி மந்திரங்கள் ஓதி, இருமத மக்களும் வாழ்த்த, தாய் பிந்து கண்கள் கலங்கியபடி, உருகி நிற்க, அஞ்சுவின் கழுத்தில் தாலி கட்டினார் சரத். திருமணத்தை முன்னிட்டு மணப்பெண் அஞ்சுவிற்கு, மசூதி நிர்வாகம் சார்பில் 10 சவரன் நகையும், 2 லட்சம் ரூபாய் ரொக்கமும் பரிசாக அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி திருமணத்தில் பங்கேற்ற சுமார் ஆயிரம் பேருக்கான சைவ உணவையும் மசூதி நிர்வாகமே ஏற்பாடு செய்தது.
மதநல்லிணக்கத்துக்கு சான்றாக நிகழ்ந்த இந்த திருமணம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பெற்று வருகிறது. இந்த திருமணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க முயற்சி நடக்கும் நிலையில், அப்படிப்பட்ட தடைகளை உடைக்க இந்த மக்கள் உதாரணமாகியுள்ளனர் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: