‘தடைவிதித்தாலும், தவறு செய்தால் உரக்கச் சொல்லுவோம்’- மத்திய அரசிற்கு மலேசிய பிரதமர் பதிலடி !

1372 0


மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வார்த்தை ரீதியிலான மனக் கசப்பு, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தில் எதிரொலித்துள்ளது. சமீபகாலமாக இந்தியாவில் நடந்த காஷ்மீர் விவகாரம், குடியுரிமைப் பிரச்னை போன்ற அனைத்து விவகாரங்களிலும் மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது தன் கருத்தை தெரிவித்துவந்தார்.

முன்னதாக காஷ்மீர் விவகாரத்தில், “இந்தியா காஷ்மீரை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. மலேசியாவைப் பொறுத்தவரை, இரு நாடுகளுக்கு இடையான பிரச்னை மற்றும் மோதல்களைத் தீர்த்துக்கொள்ள ஆக்கிரமிப்பு செய்வது சரியான தீர்வல்ல. எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் மத்தியஸ்தம் அல்லது சட்டப்படி தீர்வு காண வேண்டும்” எனப் பேசியிருந்தார்.

`இந்திய உள்நாட்டு விவகாரங்களில் மலேசியப் பிரதமர் தலையிடுவது, கருத்து தெரிவிப்பது முறையல்ல’ என்று மத்திய அரசு தரப்பில் அவருக்குப் பதில் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத் திருத்தம் பற்றியும் மகாதீர் தன் கருத்தைப் பதிவு செய்திருந்தார். அதில், “இந்தியாவில் தற்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்தியா மதச்சார்பற்ற நாடு. தொடக்கம் முதலே மக்கள் சார்ந்துள்ள மதங்கள் அவர்களின் குடியுரிமையைத் தடுக்கவில்லை. இத்தனை ஆண்டுகளாக அவர்கள் இந்தியக் குடிமக்களாகவே வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், தற்போது கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தத்தில், இஸ்லாமியர்கள் மட்டும் இந்தியக் குடிமக்களாவதிலிருந்து தடுக்கப்படுவது நியாயமல்ல” எனக் கூறினார். இதற்கும் மத்திய அரசு தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

இந்த நிலையில், மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு இந்திய அரசு திடீர் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் இந்திய வணிகர்கள் பாமாயில் இறக்குமதி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அரசின் இந்த நடவடிக்கை மலேசியாவுக்கும் பெரும் பொருளாதார இழப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இருந்தும் இது இந்தியாவுக்கும் பெரும் பாதிப்பாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி தடைப்பட்டால் இந்தியாவில் பாமாயில் விலை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

இதற்கிடையில், இந்தியாவின் நடவடிக்கை கவலை அளிப்பதாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது கருத்து தெரிவித்துள்ளார். “மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு அதிகப்படியான பாமாயில் விற்பனை செய்யப்படுகிறது. அதனால் இந்தியா தற்போது எடுத்துள்ள நடவடிக்கையை நினைத்து நிச்சயமாகக் கவலைப்படுகிறோம். ஆனால் மறுபுறம், நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும். இந்தியாவில் ஏதேனும் தவறு நடந்தால் நாங்கள் அதை உரக்கச் சொல்லவேண்டியிருக்கும்.

நாம் தவறான விஷயங்களை அனுமதித்து, பணம் தொடர்பாக மட்டுமே சிந்தித்தால் நம்மாளும் மக்களாலும் நிறைய தவறான காரியங்கள் செய்யப்படும் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மலேசிய உள்நாட்டு உற்பத்தியில் 2.8 சதவிகிதம் பாமாயில் பங்களிப்பு கொண்டுள்ளது. எனவே, பாமாயில் ஏற்றுமதி அந்நாட்டுக்கு கவலைக்குரிய ஒன்றுதான் என்று ஒரு தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர். அதே சமயம், மலேசியாவின் பாமாயில் ஏற்றுமதியை இந்தியா கைவிட்டாலும் தனக்கென புதிய சந்தையை மலேசியா உருவாக்கிக்கொள்ளும். பாமாயில் விலையேற்றத்தால் இந்தியாவுக்குத்தான் பாதிப்பு என மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: