நாளைய தினம் புதிய அரசியல் கட்சியை ராமேஸ்வரத்தில் தொடங்கி நாளை மாலை மதுரை ஒத்தக்கடையில் பொதுக்கூட்டத்தில் பேசும் கமல், இன்று மதியம் மதுரை வந்தார். அவரை வரவேற்க ரசிகர்கள் மதுரை விமான நிலையத்தில் குவிந்தனர். தாரை தப்பட்டை முழங்க `உலக நாயகனே வருக’ என்று ரசிகர்கள் கோஷமிட்டபடி இருந்தனர்.
மதியம் ஒரு மணிக்கு வந்தவர், விமான நிலையத்தில் காத்திருந்த செய்தியாளர்களிடம் பேட்டி இல்லை என்றவர், பின்பு என்ன நினைத்தாரோ பேசினார். “முக்கியமான தருணத்தில் உள்ளேன். மதுரைக்கு நான் வந்ததன் நோக்கம் கட்சியையும் அரசியல் பயணத்தையும் தொடங்குவதற்காக . நாளை மாலை சந்திப்போம்” என்றார்.
மதுரையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்ற கேள்விக்கு, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கூறிவிட்டு கிளம்பினார் கமல். மதுரை ஹோட்டலில் தங்கும் அவர், இன்று மாலை ராமேஸ்வரம் புறப்படுகிறார். நாளை காலை கலாம் படித்த அரசு பள்ளிக்கும் நினைவிடத்துக்கும் செல்கிறார். அங்கிருந்து அரசியல் பயணத்தைத் தொடங்கி ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை வழியாக மக்களைச் சந்தித்துவிட்டு மாலை மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்டத்துக்கு வருகிறார்.

Your reaction