இஸ்லாம் கூறும் முத்தலாக்!!!

3232 0


அதிரை எக்ஸ்பிரஸ்:-    தவறாக புரியப்பட்டுள்ள இஸ்லாமிய அடிப்படை சட்டங்களில் ஒன்று தலாக் அதாவது முத்தலாக். எனவே அது பற்றி விரிவான விளக்கங்களோடு இந்தக் கட்டுரை உங்கள் அனைவரையும் சந்திக்கிறது.
முதலில் தலாக் பற்றிக் கூறும் குர்ஆன் வசனங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1- அவர்கள் திருமணப் பிரிவினையை (விவாகரத்தின் மூலம்) உறுதிப் படுத்திக் கொண்டால் நிச்சயமாக இறைவன் செவியுறுபவன் நன்கறிபவன்.(அத்தியாயம் 2,வசனம் 227)
2- தலாக் விடப்பட்டப் பெண்கள் மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் வரை (தம் கணவருக்காக) காத்திருப்பார்கள். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் அவர்கள் நம்பிக்கைக் கொண்டவர்களாக இருந்தால் தங்கள் கர்பப்பைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை (குழந்தை உருவாகி இருந்தால்) மறைப்பது ஆகுமானதல்ல. அவர்களின் கணவர்கள் (இத்தாவிலிருக்கும் தம் மனைவியோடு சேர்ந்துக் கொள்ள) நல் இணக்கத்தை நாடினால் (அந்த கால கெடுவுக்குள்) அழைத்துக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு. (அத்தியாயம் 2 வசனம் 228)
3- (இத்தா கால கெடுவுக்குள் சேர்ந்துக் கொள்ளும் வாய்ப்புள்ள) இத்தகைய தலாக் இரண்டுத் தடவைகள்தான். இந்த வாய்ப்புகளில் அவளுடன் அழகிய முறையில் சேர்ந்து வாழலாம் அல்லது அழகிய முறையில் அவளை விட்டு விடலாம். (அத்தியாயம் 2, வசனம்229)
4- பின்னர்(மூன்றாவதாகவும்)தன் மனைவியை அவன் தலாக் சொல்லிவிட்டால் அதன் பிறகு அவனல்லாத வேறொரு கணவனை அவள் திருமணம் முடிக்காத வரை முதல் கணவனுக்கு அவள் அனுமதிக்கப் பட்டவளாக ஆகமாட்டாள். (இப்போது இரண்டாம்) கணவனும் அவளை தலாக் சொல்லி விட்டால் (அதன் பிறகு முதல் கணவனும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டால்) அவ்விருவரும் இறைவனின் வரம்பை நிலை நிறுத்த முடியும் என்று கருதினால் (திருமணத்தின் மூலம்) மீண்டும் இணைந்துக் கொள்வது அவ்விருவர் மீது குற்றமில்லை. இவைகள் அல்லாஹ்வின் வரம்புகளாகும். அறிவுள்ள சமூகத்தாருக்கு இறைவன் இவற்றை தெளிவு படுத்துகிறான்.(அத்தியாயம் 2 வசனம் 230)
மூன்று தலாக் பற்றி பேசும் வசனங்கள் இவை. இந்த வசனங்கள் என்ன சொல்கின்றன..?
ஒருவன் ஒரு பெண்ணை திருமணம் செய்கிறான். குடும்ப வாழ்வில் பிரச்சனை வந்து இருவரும் பிரியும் சூழ்நிலை ஏற்படுகிறது. இப்போது தன் மனைவியை விவாகரத்து செய்வதற்காக உறுதி எடுத்து விவாகரத்து செய்கிறான். – உன்னை தலாக் விட்டுவிட்டேன் – உன்னை விவாகரத்து செய்து விட்டேன் – என்று எந்த மொழியில் கூறினாலும் உடன் அது விவாகரத்தாகி விடும்.
இப்படி தலாக் விட்டவுடன் திருமண ஒப்பந்தம் முழுவதுமாக முறிந்து விடாது. தலாக் விடப்பட்டப் பெண் இவனுடைய மனைவி என்ற உறவுடனேயே மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் வரை தன் கணவனுக்காக – அவன் தன்னை மீண்டும் அழைத்துக் கொள்வான் – என்ற நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டும். இந்த காலக் கட்டங்களில் கணவன் மனம் திருந்தி மனைவி தனக்கு வேண்டும் என்பதை உணர்ந்து அவளை அழைத்துக் கொள்ள விரும்பினால் அழைத்துக் கொள்ளலாம் அதை மறுக்கும் உரிமை மனைவிக்கு இல்லை. இதை நாம் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டாவது வசனம் சொல்கிறது.
அவள் காத்திருக்கும் அந்த இத்தா காலத்திற்குள் கணவன் அவளை அழைத்துக் கொள்ளவில்லை என்றால் இருவருக்கும் இருந்த திருமன உறவு முற்றிலுமாக முறிந்து விடுகிறது. இவன் யாரோ.. அவள் யாரோ.. என்ற நிலைக்கு இருவரும் வந்து விடுகிறார்கள்.இப்போது அவள் வேறொரு ஆணையோ இவன் வேறொரு பெண்ணையோ திருமணம் செய்துக் கொள்ளலாம்.
இந்நிலையில் விவாகரத்தின் மூலம் பிரிந்த அவ்விருவரும் மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறார்கள். இப்போது அவர்கள் திருமணத்தின் மூலம் (திருமணத்திற்குரிய எல்லா விதிகளும் இங்கு பொருந்தும்) சேரலாம்.
மீண்டும் கணவன் மனைவியாக வாழ்க்கையை தொடரும் போது பழையப்படி சிக்கல் உருவாகிறது. இப்போது இரண்டாம் முறையாக கணவன் அவளை விவாகரத்து செய்கிறான். முதல் விவாகரத்து செய்த போது கடைபிடித்த எல்லா சட்டங்களும் இங்கும் கடைபிடிக்கப் பட வேண்டும்.
மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் வரை அவள் இத்தா இருக்க வேண்டும்;.
இந்த காலக்கட்டங்களில் மனைவி என்ற உறவு நீடிக்கும்;
கணவன் விரும்பினால் அவளை அழைத்துக் கொள்ளலாம்.
அதை மறுக்கும் உரிமை அவளுக்கு இல்லை.
இத்தா காலக்கட்டங்களில் சேர்ந்துக் கொண்டால் எவ்வித சம்பர்தாயமும் இல்லாமல் கணவன் மனைவி என்ற உறவு நீடிக்கும். ஒருவேளை சேரவில்லையானால் கணவன் மனைவி என்ற உறவு முழுவதும் ரத்தாகிறது.
மூன்றாவது முறையும் இருவரும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு திருமணம் செய்துக் கொள்கிறார்கள். பழைய பிரச்சனை கிளம்பி மூன்றாவதாகவும் கணவன் அவளை தலாக் கொடுக்கிறான். இந்த தலாக்கிற்கும் அவள் இத்தா இருக்க வேண்டும். இந்த இத்தா கணவன் தன்னை மீண்டும் அழைப்பான் என்பதற்காக அல்ல ஏனெனில் கணவனால் அவளை அழைக்கவே முடியாது. இத்தாவின் நோக்கம் அவள் தன் கணவனால் கர்ப்;பம் தரித்திருக்கிறாளா.. என்று பார்க்கத்தான்.
இத்தாவின் நோக்கங்கள் இரண்டு.
ஒன்று – கணவன் மீண்டும் அழைப்பான் என்று எதிர்பார்த்திருப்பது.
இரண்டு – அவள் கர்ப்பம் தரித்திருக்கிறாளா.. என்று நோக்குவது.
இதில் முதல் நோக்கம் ஆரம்ப இரண்டு தலாக்கிற்கே பொருந்தும். அதாவது கணவனுக்காக காத்திருப்பது என்பது முதல் இரண்டு தலாக்கிற்குத்தான். மூன்றாவது தலாக்கிற்கு பின் மனைவி இத்தா இருப்பது கணவன் மீண்டும் அழைப்பான் என்பதற்காக அல்ல. அந்த உரிமை கணவனுக்கு இல்லை. ஏனெனில், — கணவன் மீண்டும் அழைக்க தக்க தலாக் இரண்டு முறைதான் — என்று நாம் எடுத்துக்காட்டிய வசனம் (2:229) தெளிவாக கூறிவிடுகிறது. மூன்றாவது தலாக்கிற்கு பின் கர்ப்பம் உண்டா.. என்று மட்டுமே பார்க்க வேண்டும். இந்த காலங்களில் அவள் கர்ப்பம் தரித்திருந்தால் அப்போது அவளது இத்தா காலம் அவள் குழந்தைப் பெற்றெடுக்கும் வரையிலாகும்.
கர்ப்பிணிகளின் இத்தா காலம் அவர்கள் குழந்தைப் பெற்றெடுக்கும் வரையிலாகும். (அத்தியாயம் 65 வசனம் 4)
மூன்று தலாக்கிற்கு பிறகும் கூட இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று அவர்கள் விரும்பினால் அப்போது ஒரு முக்கியமான நிபந்தனையை இஸ்லாம் விதித்து விடுகிறது.
அதாவது அவளை வேறொரு ஆண் திருமணம் முடித்து அவளோடு இல்லறம் நடத்தி பிரச்சனை வந்து அவளை தலாக் விட்டு; அவள் தன்னுடைய இத்தா காலத்தை முடித்தால்தான் முந்திய கணவனோடு அவள் திருமணத்தின் மூலம் சேர முடியும். இந்த விளக்கம் (2:230) வசனத்தில் கிடைக்கிறது. இதுதான் தலாக்கிற்குறிய சட்டங்களாகும். இந்த விஷயங்களை விளங்குவதில் எந்த அறிஞருக்கும் மாற்றுக் கருத்து இல்லை மாற்றுக் கருத்துக் கொள்ளவும் முடியாது.
ஓர் ஆணுக்கு அவனது இயல்புகளை கருதி மூன்று தவணைகளில் பயன் படுத்தலாம் என்று வழங்கப்பட்ட இந்த தலாக் சட்டத்தை ஒருவன் முறைக் கேடாக பயன்படுத்துகிறான் எப்படி..?
மூன்று தலாக்கையும் ஒரே நேரத்தில் சொல்லி விடுகிறான். இப்போது இந்த தலாக்கின் நிலைப்பாடு என்ன? என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது.
ஒருவன் ஒரு சட்டத்தை முறைக் கேடாக பயன்படுத்தும் போது அது பயன் படுத்தியவனின் அறிவின்மையை காட்டுமே தவிர அந்தக் கோளாருக்க அதே வழியில் சட்டத்தை திருப்பி விடக் கூடாது.
தலாக் என்பது மூன்று சந்தர்பங்களை வழங்கும் ஒரு சட்டமாகும்;. மூன்று சந்தர்பங்களையும் ஒரே சந்தர்பமாக்கிக் கொள்வேன் என்று ஒருவன் அறிந்தோ அறியாமலோ முடிவெடுத்தால் அந்த சட்டம் வழங்கும் மூன்று சந்தர்ப்பம் என்ற நிபந்தனை காலாவதியாகி விடாது.
இறைத்தூதர் வாழ்ந்தக் காலத்தில் கூட சிலர் இந்த அறியாமையை செய்தனர். அப்படி செய்வது தவறு என்று நபி-ஸல்- அவர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்கர்-ரலி-அவர்கள் காலத்திலும் உமர்(ரலி)அவர்களின் ஆரம்ப இரண்டு கால ஆட்சியிலும் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கணிக்கப்பட்டு வந்தது. (இப்னு அப்பாஸ்(ரலி) நூல் முஸ்லிம்,அஹ்மத்)
ருகானா என்பவர் தம்மனைவியை ஒரு இடத்தில் வைத்து மூன்று தலாக் சொல்லி விட்டார் பிறகு வருந்தினார் இதை அறிந்த நபி-ஸல்- அவர்கள் உன் மனைவியை திருப்பி அழைத்துக் கொள் என்றார்கள். அதற்கு அவர் நான் என் மனைவியை மூன்று தலாக் சொல்லி விட்டேனே என்றார். அதை நான் அறிவேன் நீ உன் மனைவியை திருப்பி அழைத்துக் கொள் என்றார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி) நூல் அஹ்மத், ஹாக்கிம், அபூதாவூத்)
ஒரு மனிதர் தம் மனைவியை ஒரே நேரத்தில் மூன்று தலாக் சொன்ன செய்தியைக் கேள்விப்பட்ட நபி(ஸல்) அவர்கள் பெரும் கோபம் அடைந்து – நான் உயிரோடு உங்கள் மத்தியில் இருக்கும் போதே அவர் அல்லாஹ்வின் வேதத்தோடு விளையாடுகிறாரா.. என்றுக் கேட்டார்கள். (இந்தக் கோபத்தை கண்ட)ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! நான் அவரை கொன்று விடட்டுமா.. என்றுக் கேட்டார். (முஹம்மத் பின் லபீத்(ரலி) நஸயி)
இந்த செய்திகளை ஆழமாக கவனிக்கும் எவரும் ஒருவன் முத்தலாக்கை முறைக்கேடாக ஒரே நேரத்தில் பயன் படுத்தினாலும் அவை ஒரு தலாக்காகவே கருதப்படும். அவன் விரும்பினால் தன் மனைவியோடு சேர்ந்து வாழலாம் அதற்கு தடையில்லை என்பதை விளங்கலாம்.
தலாக் முறைக் கேடாக பயன் படுத்தப்பட்டபோது – அல்லாஹ்வின் வேதத்தோடு விளையாடுகிறாரா..- என்று நபி(ஸல்) கோபப்பட்ட விஷயத்தை நாம் ஊன்றி கவனிக்க வேண்டும்! அல்லாஹ்வின் வேதத்தோடு விளையாடுதல் என்றால் என்ன?
அல் குர்ஆன் 2:229 வது வசனத்தில் அத்தகைய (அதாவது திருப்பி அழைத்துக் கொள்ளத்தக்க) தலாக் இரண்டு தடவைகள் என்று இறைவன் கூறுகிறான்.
இரண்டு தடவைகள் என்பதை முறையாக விளங்க வேண்டும்.
ஒரு தடவை என்பதற்கு ஒரு ஆரம்பமும் ஒரு முடிவும் அவசியம். இப்படி இரண்டு ஆரம்பங்களையும், இரண்டு முடிவுகளையும் இறைவன் மீண்டும் அழைக்கத்தக்க தலாக்கிற்கு நிபந்தனையாக்குகிறான்.
முத்தலாக் ஒரே நேரத்தில் கொடுக்கப்படும் போது இறைவனின் இந்த நிபந்தனைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு விடுகிறது. இதுதான் இறைத்தூதருக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது.
மூன்று தடவைகள் என்று இறைவன் சொல்லியுள்ளதை மூன்று வார்த்தைகளாக்கும் உரிமை எவருக்கும் இல்லை.
மூன்று தடவை என்பதை மூன்று தடவையாகவே எந்த அறிவாளியும் புரிந்துக் கொள்வான். எளிய உதாரணங்களால் இதை விளங்கலாம். நோய்க்கு டாக்டர் மருந்துக் கொடுத்து காலை, மதியம், இரவு என்று மூன்று தடவைகளில் இதைக் குடி என்கிறார். மூன்று வேலை மருந்தையும் ஒருவன் ஒரே தடவையில் குடிக்கிறான் இவன் சரியாகத்தான் செய்தான் என்று யாரும் கூற மாட்டோம்.
மூன்று வேலைக்கு மூன்று பிளேட் உணவை ஒருவர் சாப்பிட சொல்கிறார் மூன்று பிளேட்டையும் ஒரே வேலையில் சாப்பிட்டால் அது மூன்று வேலை உணவாக ஆகாது.
முத்தலாக்கும் இதே அடிப்படையை கொண்டதுதான்.
ஒருவன் ஒரே நேரத்தில் முத்தலாக் சொன்னாலும் அது ஒரே தலாக்காகத்தான் கருதப்படும். முதல் தலாக்கின் போது என்ன சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டுமோ அதுதான் கடைபிடிக்கப் படவேண்டும்.
முத்தலாக் என்பது முத்தலாக் தான் என்று எவராவது வாதிட்டால் அது இறைவனின் சட்டத்திற்கும் முஸ்லிம் பெண்களுக்கும் எதிரான சதி என்று நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: