அதிரை வரலாற்றில் AFFA கால்பந்து தொடர் பெஸ்ட் : மெச்சும் அதிரை கால்பந்து ரசிகர்கள்!!

1321 0


அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் 20 ம் ஆண்டு தென்னிந்திய அளவிலான மாபெரும் மின்னொளி கால்பந்து தொடர் போட்டி கடந்த 11.07.2022 திங்கள்கிழமை துவங்கியது.

தென்னிந்திய அளவிலான இந்த மின்னொளி தொடர் போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் தரம் வாய்ந்த அணிகள் பங்கு பெற்று விளையாடினர்.

மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் நாக் – அவுட் சுற்று முறையில் நடைபெற்றது. அதிரை அணிகள் சிறப்பாக விளையாடிய போதிலும் அடுத்ததடுத்து சுற்றுகளுக்கு முன்னேற முடியாமல் போனது அதிரை ரசிகர்களை வருத்தமடைய செய்தாலும், தொடரை நடத்தும் அதிரை AFFA அணி இளம் வீரர்களின் புது உத்வேகத்துடன் இத்தொடரில் சிறப்பாக விளையாடி காலிறுதி வரை சென்று டை – பிரேக்கர் முறையில் நூலிலையில் அரையிறுதியை தவறவிட்டாலும் அதிரை ரசிகர்களுக்கு AFFA அணியின்ஆட்டத் திறன் ஆறுதலாக அமைந்தது.

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சமபலம் UNITED FC திருச்சி – KLOTHUNGAN 7’s தஞ்சாவூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர்.

இரவு 9.45 மணிக்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களால் இந்த இறுதிப் போட்டி துவங்கி வைக்கப்பட்டது. போட்டி ஆரம்பத்திலிருந்தே அனல் பறக்க ஆரம்பித்தது. இரு அணி வீரர்களும் தங்களது அணியில் முதல் கோலை பதிவு செய்ய முனைப்புடன் கிடைத்த வாய்ப்புகளை கோல் கம்பம் நோக்கி ஷூட் செய்தும் இரு அணி கோல் கீப்பர்களாலும் தடுக்கப்பட்டது.

இரண்டாவது பகுதி நேர ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் ஏதும் போடாததால் டை – பிரேக்கர் முறையில் வெற்றி தோல்வி நிர்ணயம் செய்யப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற இந்த டை பிரக்கரிலும் இரு அணிகளும் 3 – 3 என மீண்டும் சமநிலையடைந்ததால், மீண்டும் டை பிரேக்கர் தொடர்ந்தது. அதிலும் இரு அணிகள் 4 – 4 என சமநிலையடைந்தது அதிரை ரசிகர்களை பெரும் பரவசத்திற்கு உள்ளாக்கியது.

இரு டை – பிரேக்கர்களிலும் சமநிலையடைந்ததால் டாஸ் மூலம் KLOTHUNGAN 7’s தஞ்சாவூர் அணி வெற்றி பெற்று முதல் பரிசு ₹.50,020/- ரொக்கத் தொகையோடு வெற்றிக் கோப்பையும் கைப்பற்றியது.

டாஸ் மூலம் UNITED FC திருச்சி இரண்டாமிடம் பெற்றிருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் அந்த அணியும் வெற்றி பெற்ற அணியாகவே பார்க்கப்பட்டது. UNITED FC திருச்சி அணிக்கு ₹.30,020/- ரொக்கத்துடன் (Runners) கோப்பை வழங்கப்பட்டது.

இத்தொடர் போட்டி குறித்து பேசிய திருச்சி அணியின் கோல் கீப்பர் விக்கி இந்த தென்னிந்திய அளவிலான AFFA – ன் கால்பந்து தொடர் அதிரை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தொடராகவும், வீரர்களின் மன நிலையறிந்து அதிரை AFFA நிர்வாகம் செயல்பட்டதாகவும், மைதானத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ரசிகர்கள் என்னுடன் நட்பு பாராட்டினர், எனக்கு இது அதிராம்பட்டினத்தில் மறக்க முடியாத தொடராக இது இருக்கும் என கூறினார்.

அதிரை AFFA – ன் தென்னிந்திய அளவிலான இந்த கால்பந்து தொடர் இறுதி போட்டியை காண 2500 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடியது அதிரை வரலாற்றில் இத்தொடர் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளதாகவும் அதிரையர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: