ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இமாலய வெற்றி பெற்ற திமுக.. படுதோல்வியடைந்த அதிமுக.. காணாமல் போன கட்சிகள்!

785 0


நடந்து முடிந்துள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் 1,521 இடங்களில் திமுக கூட்டணி 1,145 இடங்களில் வென்றுள்ளது. அதிமுக 214 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் இரு பதவிகளையும் சேர்த்து 95 சதவிகித இடங்களை திமுக கைப்பற்றி உள்ளது. அதே நேரத்தில் பிரதான எதிர்கட்சியான அதிமுக மிக குறைந்த இடங்களையே கைப்பற்றி உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை ஆளும் கட்சியாக இருந்த அதிமுக படுதோல்வியை தழுவியுள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் 2 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்களித்த மக்கள் ஒவ்வொருவரும் 4 வாக்குகள் அளித்தனர். வாக்குச்சீட்டு முறையிலேயே வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி 4 வாக்குச்சீட்டும் 4 வெவ்வேறு கலரில் அச்சிடப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கு திமுக, அதிமுக மற்றும் பாமக, மநீம, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் அவரவர் கட்சி சின்னத்தில் நேருக்கு நேர் போட்டியிட்டனர். மேலும், உள்ளூரில் செல்வாக்குள்ள நபர்கள் பலரும் சுயேட்சையாக போட்டியிட்டனர்.

ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு கட்சிகளின் ஆதரவு மற்றும் தங்களது தனிப்பட்ட செல்வாக்குடன் சுயேட்சை சின்னத்தில் போட்டியினர். அதன்படி, தேர்தல் நடைபெற்ற மாவட்ட ஊராட்சிகளின் எண்ணிக்கை 9 ஆகும். மொத்த மாவட்ட ஊராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 140. மொத்த ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை 74ம், மொத்த ஊராட்சி ஒன்றிய வார்டுகளின் எண்ணிக்கை 1381, மொத்த ஊராட்சிகளின் எண்ணிக்கை 2,901, மொத்த ஊராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 22,581 ஆகும். இதில் 2,981 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இரண்டு கட்டங்களாக பதிவான வாக்குகள் அனைத்தும் 74 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. வாக்கு எண்ணும் பணிகள் அனைத்தும் சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது.

மொத்தம் தேர்தல் நடந்த 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி 138 இடங்களை கைப்பற்றி உள்ளது. அதிமுகவுக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அதாவது செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடத்தில் அதிமுக வென்றுள்ளது. மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 கவுன்சிலர் பதவிகளையும் திமுக கைப்பற்றி உள்ளது. வேலூர் மாவட்டத்திலும் மொத்தம் உள்ள 14 இடங்களையும், ராணிப்பேட்டையில் மொத்தம் உள்ள 13 இடங்களையும், கள்ளக்குறிச்சியில் மொத்தம் உள்ள 19 இடங்களையும், திருப்பத்தூரில் மொத்தம் உள்ள 13 இடங்களையும், நெல்லையில் மொத்தம் உள்ள 12 இடங்களையும், தென்காசியில் மொத்தம் உள்ள 14 இடங்களையும் தி.மு.க. கைப்பற்றி உள்ளது. இதன்படி 7 மாவட்டங்களில் திமுக ஒட்டு மொத்த கவுன்சிலர் பதவிகளையும் தன்வசப்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 16 இடங்களில் திமுக 15 இடங்களையும், அதிமுக ஒரு இடத்தையும் வென்றுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 28 கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க. 27 இடங்களையும், அ.தி.மு.க. ஒரு இடத்தையும் கைப்பற்றி இருக்கின்றன. திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 13 இடங்களில் தி.மு.க. 13 இடங்களையும் கைப்பற்றி உள்ளது.

ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்த 1,381 இடங்களில் 1,368 பதவிகளுக்கான முடிவுகள் வெளிவந்துள்ளன. இதில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 1,007 இடங்களையும், அ.தி.மு.க. 214 இடங்களையும், பா.ம.க. 45 இடங்களையும், அ.ம.மு.க. 5 இடங்களையும், தேமுதிக 1 இடத்தையும் கைப்பற்றி உள்ளது. சுயேட்சைகள் மற்றும் இதர கட்சிகள் 96 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

9 மாவட்டங்களிலும் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் இரு பதவிகளையும் சேர்த்து 95 சதவிகித இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது. அதே நேரத்தில் பிரதான எதிர்கட்சியான அதிமுக மிக குறைந்த இடங்களையே கைப்பற்றி உள்ளது. பிற கட்சிகளை பொருத்தவரையில் பாமக ஓரளவு இடங்களை கைப்பற்றி உள்ளது. அந்த கட்சிக்கு 45 இடங்கள் கிடைத்துள்ளன. ஆனால் மற்ற கட்சிகள் அனைத்தும் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளன.

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை, அதிமுக இதுவரை சந்தித்திராத தோல்வியை இந்த தேர்தலில் சந்தித்துள்ளது. அதேபோல மற்ற கட்சிகளான பாஜக, பாமக, மநீம, நாம் தமிழர் என உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட பல கட்சிகள் பரிதாபகரமான தோல்வியை தழுவியுள்ளன. அதே நேரத்தில் முதன்முறையாக உள்ளாட்சித் தேர்தலை சந்தித்த விஜய் ரசிகர்கள் 110 பேர் வரை வெற்றி பெற்றுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் 1,521 இடங்களில் திமுக கூட்டணி 1,145 இடங்களில் வென்றுள்ளது. அதிமுக 214 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 98 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 9 மாவட்ட தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களை வாரிசுருட்டி இருக்கிறது. இது திமுகவுக்கு கிடைத்த இமாலய வெற்றியாகும். இந்த வெற்றியை திமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: