அன்று ரூ. 2.8 கோடி.. இன்று ரூ. 18,000 கோடி.. டாடா கைகளுக்கு மீண்டும் ஏர் இந்தியா வந்த கதை!

467 0


கடந்த 1953ஆம் ஆண்டில் டாடா குழுமத்திடம் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்தை ஒன்றிய அரசு 2.8 கோடி ரூபாய்க்கு வாங்கிய நிலையில், இப்போது 68 ஆண்டுகளுக்குப் பிறகு அதே ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் ரூ 18 ஆயிரம் கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

கடந்த 68 ஆண்டுகளாக ஒன்றிய அரசின் கீழ் செயல்பட்டு வந்த ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி, அதை விற்க கடந்த சில ஆண்டுகளாகவே ஒன்றிய அரசு தொடர்ந்து முயன்று வந்தது.
பொதுவாகவே விமான நிறுவனத்தை நடத்துவது என்பது மிகவும் சவாலான ஒரு காரியம். அதிலும் இந்த கொரோனா பொருந்தொற்று போன்ற காலத்தில் சவால் பல மடங்கு கூடிவிடும். இந்த நிலையில், பெரும் கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியாவை வாங்கப் பலரும் தயக்கம் காட்டினர்.

இந்தச் சூழலில் பல மாதப் போராட்டத்திற்குப் பிறகு ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இதைக் கொண்டாடும் வகையில் ரத்தன் டாடா தனது ட்விட்டர் பக்கத்தில், “வெல்கம் பேக், ஏர் இந்தியா” எனப் பதிவிட்டுள்ளார். கிட்டதட்ட தமிழ் சினிமா போல பல ஆண்டுகளுக்குப் முன் தனது கையை விட்டுப் போன ஏர் இந்தியாவை மீண்டும் டாடா குழுமம் தன்வசப்படுத்தியுள்ளது. ஏர் இந்தியா வரும் அக்டோபர் 15ஆம் தேதி தனது 89ஆவது பிறந்த நாளை கொண்டாடவுள்ள நிலையில், மீண்டும் அது டாடா கைகளுக்குச் சென்றுள்ளது.

1932ஆம் ஆண்டு ஜேஆர்டி டாடா, 2 லட்சம் முதலீட்டில் டாடா ஏர் மெயில் என்ற பெயரில் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார். சரக்கு விமானச் சேவையாகத் தொடங்கிய ஏர் இந்தியா மிக விரைவில் லாபமீட்டும் நிறுவனமாக மாறியது. 1933ஆம் ஆண்டு 60 ஆயிரம் ரூபாய் லாபமீட்டிய டாடா ஏர் மெயில், 1937ஆம் ஆண்டு 6 லட்ச ரூபாயை லாபமாக ஈட்டியது. 1938ஆம் ஆண்டு டாடா ஏர் மெயில் நிறுவனத்தின் பெயர் டாடா ஏர்லைன்ஸ் என மாற்றப்பட்டது. அந்தச் சமயத்தில் 2ஆம் உலகப் போர் ஏற்படவே டாடா ஏர்லைன்ஸின் முழு கட்டுப்பாடும் பிரிட்டனிடம் சென்றது. 2ஆம் உலகப் போருக்குப் பிறகு டாடா ஏர்லைன்ஸ், மீண்டும் டாடா கைகளுக்கு வந்தது. அப்போது தான் அந்த நிறுவனம் ஏர் இந்தியா என்ற பெயரைப் பெற்றது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1953ஆம் ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை 2.8 கோடி ரூபாய் கொடுத்து நேரு அரசு வாங்கி, அதை அரசுடைமையாக்கியது. ஏர் இந்தியா அரசுடமைக்கப்பட்ட போதிலும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஜேஆர்டி டாடாவே அந்நிறுவனத்தின் தலைவராக இருந்தார். அவர் 1978இல் தான் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 1978 ஜனவரி 1ஆம் தேதி, மும்பையில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் முதல் போயிங் 747 விமானம் அரேபிக் கடலில் விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் 213 பேர் கொல்லப்பட்டனர். இந்த விபத்து நடந்த ஒரு மாதத்தில் ஜேஆர்டி டாடா ஏர் இந்தியா தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் 1980களில் இந்திரா காந்தி அவரை மீண்டும் ஏர் இந்தியா இயக்குநர் குழுவில் சேர்த்திருந்தார்.

உலகமயமாக்கலுக்குப் பிறகு, மீண்டும் ஏர்லைன் துறையில் காலடி எடுத்து வைக்க டாடா குழுமம் தொடர்ந்து முயன்றது. கடைசியாக 2012ஆம் ஆம் ஆண்டு சிங்கப்பூர் ஏர்லைன்சுடன் இணைந்து டாடா குழுமம் ஏர் விஸ்தாரா நிறுவனத்தைத் தொடங்கி, நடத்தி வருகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க மத்திய அரசு முடிவு செய்த போது, தொடக்கம் முதலே இதனை வாங்கும் முயற்சிகளில் டாடா குழுமம் ஈடுபட்டு வந்தது. இந்த டீல் நேற்று இறுதி செய்யப்பட்டது. 68 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா மீண்டும் டாடா கைகளுக்குச் சென்றுள்ளது.

இந்த டீல் படி, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய 2 நிறுவனங்களின் 100% பங்குகள் டாடா குழுமத்திற்குச் செல்லும். அதேபோல ஏர் இந்தியாவின் விமான நிலைய சேவைகள் நிறுவனமான Air India SATS Airport Services Private Limited (AISATS)இன் 50% சதவிகித பங்குகள் டாடா குழுமத்திற்குச் செல்லும். ஏர் இந்தியா நிறுவனத்திற்கு தற்போது ரூ 61,562 கோடி கடன் உள்ளது. அதில் 15,300 கோடி ரூபாய் கடனுக்கு டாடா பொறுப்பேற்கும். மீதமுள்ள கடனை ஒன்றிய அரசு செலுத்த வேண்டும். இதுபோக சுமார் ரூ 2,700 கோடியை ஒன்றிய அரசுக்கு டாடா குழுமம் அளிக்கும். மேலும், ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் குறைந்தபட்சம் ஓர் ஆண்டிற்கு பணியில் வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது கடந்த 1953ஆம் ஆண்டில் டாடா குழுமத்திடம் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு வெறும் 2.8 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தது. உலகமயமாக்கலுக்குப் பிறகு பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனத்தை இப்போது 68 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டாடா குழுமம் கைப்பற்றியுள்ளது. கடன் உள்ளிட்டவற்றைச் சேர்த்து மொத்தம் ரூ 18 ஆயிரம் கோடி கொடுத்து டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Courtesy : One India Tamil

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: