அதிரை இஸ்லாமிய பெண்களை தவறாக சித்தரிக்கும் மணிரத்னத்தின் நவரசா திரைப்படம்!

1611 0


மணிரத்னம் தயாரித்துள்ள நவரசா ஆந்தாலஜி (9 குறும்படங்களின் தொகுப்பு) வெளியாகியுள்ளது. இதில் ஒரு குறும்படத்தில் சித்தார்த், பார்வதி இஸ்லாமியர்களாக நடித்துள்ளதாக அதன் போஸ்டர்களை வைத்தே அறிய முடிந்தது.

சினிமா மூலம் இஸ்லாமியர்கள் மீது தவறான கண்ணோட்டத்தை பொது சமூகத்தில் விதைத்ததில் மணிரத்னத்துக்கு முக்கிய பங்கு உண்டு. அவர் தயாரித்துள்ள இப்படம் எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் வெளியீட்டுக்கு முன்பே எழாமல் இல்லை.

இந்த நிலையில், இப்படத்தின் ஒரு சிறு காட்சியை நண்பர்கள் எனக்கு அனுப்பி உடனே பார்க்க சொன்னார்கள். அதில், எனது ஊரான அதிராம்பட்டினத்தின் பெயரை சித்தார்த் உச்சரிக்கிறார்.

இஸ்லாமியர்கள் என்றாலே நாகூர், ராமநாதபுரம் என்று சினிமாக்களில் பார்த்து பழகிய நமக்கு இது சற்று வித்தியாசமாக இருந்தது. அதை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் அதிகரித்தது.

அதை பார்த்த பின்பு கோபமும் எரிச்சலும் தான் ஏற்பட்டது. வழக்கம் போல தனது தயாரிப்பில், இஸ்லாமியர்கள் மீதும், அவர்களின் வாழ்வியல் மீதும் களங்கத்தை கற்பித்து இருக்கிறார் மணிரத்னம். இதன் இயக்குநர் ரதீந்திரன் ஆர்.பிரசாத்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த ஏழை உப்பு வியாபாரியின் மகளான வஹீதாவை இளம் வயதிலேயே ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த வயதான செல்வந்தரான மரைக்காயருக்கு பணத்துக்காக திருமணம் முடித்துக் கொடுக்கிறார்கள்.

வஹீதா வேறொருவனை வெளியில் காதலிக்கிறார். தான் திருமணம் செய்த அந்த முதியவரை கொன்றுவிட்டு அவரது சொத்தை அபகரிக்க காதலனுடன் திட்டமிடுகிறார் வஹீதா.

அதற்காக முத்துப்பேட்டையை சேர்ந்த செய்வினைக்காரனான ஹுசைனை சந்திக்கிறார். அவர் அருகே 2 இஸ்லாமிய பெண்கள் அடிமை போல் அமர வைக்கப்பட்டுள்ளனர். அப்போது, அருகே இஸ்லாமியர்களின் புனித வேதமான திருக்குர்ஆன் திறந்தே வைக்கப்பட்டுள்ளது.

ஓதாத நேரத்தில் குர்ஆனை மூடிவிட வேண்டும் என்பது சாதாரன இஸ்லாமிய சிறுவனுக்கு கூட தெரியும். அந்த திருக்குர்ஆனின் தமிழாக்கத்தை படித்திருந்தாலே ஜின் என்பது ஒரு சாதாரண படைப்பினம் என்று இயக்குநருக்கு தெரிந்திருக்கும்

மரைக்காயருக்கு ஜின் ஒன்றை ஏவிவிடலாம் என்கிறார் ஹுசைன். அல்லாஹ் கூட மன்னித்துவிடுவான் ஆனால் ஜின் மன்னிக்காது என்று அவர் வாஹிதாவிடம் எச்சரிக்கிறார். அல்லாஹ்வை விட ஜின்னுக்கு அதிக சக்தி இருப்பதை போன்ற தவறான தகவலை இதன் மூலம் பரப்புகின்றனர்.

கொலையாளியாக காட்டப்படும் வஹீதா, ஒரு காட்சியில் “10% ஜக்காத் கொடுக்கிறேன். 2 முறை ஹஜ்ஜுக்கு பொய்விட்டேன். உம்ரா சென்றுவிட்டேன். என் பாவங்கள் முடிந்துவிடும் தானே…” என பேசும் வசனம் இஸ்லாமிய வழிபாடுகளை மறைமுக விமர்சிக்கும் வகையில் காட்சியமைக்கப்பட்டு உள்ளது.

எதையும் படிக்காமல், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஊர்கள் பெயர், ரூமியின் வரிகள், அரபி காலிகிராபி பற்றி கொஞ்சம் படித்துவிட்டு, பொதுபுத்தியில் உள்ள கழிவுகளை மனதில் ஏற்றிக்கொண்டு அரைகுறை அறிவோடு இஸ்லாமியர் குறித்து படமெடுக்கிறேன் பேர்வழி என்று சொல்லி வாந்தி எடுத்து வைத்திருக்கிறார்கள்.

காட்சிகள் குழப்பம் தருவதாக உள்ளன. சுவாரஸ்யம் சுத்தமாக இல்லை. வணிக ரீதியாக பார்த்தாலும் இது ஒரு மொக்கை படம் தான்.

– நூருள்

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: