மதுக்கூர் அருகே ரேஷன் கடையில் அரிசியின் தரம் குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வடக்கு பகுதியில் மகாத்மாகாந்தி மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சந்தித்து அவர்களது தேவைகளையும், கால்நடைகள் வளர்ப்பதற்கு கடன் வழங்குவது குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும் அவர், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக தங்களது கிராமங்களில் பொதுமக்கள் முககவசம் அணிவதுடன், சானிடைசர் பயன்படுத்தி சுத்தமாக இருக்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் மகளிர் சுயஉதவிக்குழுவினரை அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அவர், அண்டமி ஊராட்சி பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தின் கீழ் 10 ஏக்கரில் எந்திரம் மூலம் நெல் பயிர் நடவு செய்த வயலை நேரில் பார்வையிட்டார். அதேபோல் அண்டமி வெள்ளாளர் தெரு பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.
மதுக்கூர் அருகே அண்டமி ஊராட்சி பகுதியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் மக்களுக்கு வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை ஆகியவற்றின் இருப்பு பற்றி கேட்டறிந்த கலெக்டர், ரேஷன் அரிசி தரமாக இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்டார்.
அதேபகுதியில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த மருத்துவ முகாமையும் பார்வையிட்டு
மதுக்கூர் பேரூராட்சிக்குட்பட்ட இந்திராநகர் பகுதியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள வீட்டை பார்வையிட்ட கலெக்டர், ராமாம்பாள்புரம் பகுதியில் தொற்று ஏற்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பாலசந்தர், பட்டுக்கோட்டை தாசில்தார் தாரணிகா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரமணி, குமாரவடிவேல் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Your reaction