தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக அசன் முகமது ஜின்னா நியமனம்!

990 0


சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே உயர் நீதிமன்ற அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். தற்காலிகமாக 23 பேர் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞராக திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையை சேர்ந்த அசன் முகமது ஜின்னா(44) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச்செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.

அசன் முகமது ஜின்னா, திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை வக்கீல் அசன் முகமது. தாயார் தாஜூனிஷா. இவர்களுக்கு ஓரே மகனாய் பிறந்த அசன் முகமது ஜின்னா, நாகை சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியிலும், கருணாநிதி படித்த திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார்.

அதன்பின், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்ட கல்லூரியில் சட்டம் படித்து, 1999-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். இவரது தந்தை அசன் முகமது, நாகை மாவட்ட குற்றவியல் மற்றும் அரசு பிளீடராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அவசரநிலை பிரகடனப்படுத்திய காலத்தில் முரசொலி நாளேட்டில் துணை ஆசிரியராக பணியாற்றியவர்.

அதேபோல அசன் முகமது ஜின்னாவும் பொதுநலம் சார்ந்த பல வழக்குகளை தொடர்ந்தவர். குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை கடந்த 2001-ம் ஆண்டு இரவோடு இரவாக அகற்றப்பட்டது. அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் இவர் வழக்கு தொடர்ந்தார். அந்த சிலையை அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை பெற்றார்.

2006-ம் ஆண்டு அந்த சிலை மெரினா கடற்கரையில் மீண்டும் வைத்து திறப்புவிழா நடந்தபோது, அசன் முகமது ஜின்னாவின் சட்டப்போராட்ட பணியை அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி பாராட்டி பேசினார். 2004-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து இளம் தலைவர்கள் குழு அமெரிக்காவுக்கு நல்லுறவு பயணமாக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் அசன் முகமது ஜின்னா இடம்பெற்றார்.

அமெரிக்க சுதந்திர தினவிழாவில், அந்நாட்டின் அன்றைய வெளியுறவு மந்திரி காலின் பவலிடம், இந்தியாவை ஐ.நா. அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் அரசு குற்றவியல் வக்கீலாக அசன் முகமது ஜின்னா பணியாற்றினார். பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் ஆஜரானார். குறிப்பாக, கல்லூரி மாணவி சரிகா ஷா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: