பாலஸ்தீனத்தின் நியாயமான காரணங்களுக்காக ஆதரவு: இந்தியா

671 0


பாலஸ்தீனத்தின் நியாயமான காரணங்களுக்காக இந்தியா தனது வலுவான ஆதரவை அளிக்கிறது என்று ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான மோதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசும்போது, கடந்த சில நாட்களாக நடக்கும் நிகழ்வுகள் இரு நாடுகளிடையேயான பாதுகாப்பில் சரிவை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் நியாயமான காரணங்களுக்காக இந்தியா தனது வலுவான ஆதரவை அளிக்கிறது.
கிழக்கு ஜெருசலேம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கட்டுப்பாட்டைக் காட்ட வேண்டாம் என்றும், பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என்றும் இரு தரப்பினரையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
நடக்கும் வன்முறைச் சம்பவங்கள், இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என்பதை உணர்த்துகின்றன.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான உகந்த நிலைமையை உருவாக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்படும் என்று இந்தியா நம்புகிறது” என்று தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன?

1967இல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரமாக இருக்கும் என்று அந்நாடு அப்போது அறிவித்தது. இதற்கு பாலஸ்தீனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. ஆனால், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதையடுத்து இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே மோதல் வலுத்து வருகிறது.
பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசா முனை பகுதி உள்ளது. இந்தப் பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது.
ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக யாஹ்யா அல் சின்வார் 2017இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாலஸ்தீனப் போராளிகளுக்கு எதிராக சந்தேகத்துக்கு இடமான நபர்களைக் கொன்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் 2011ஆம் ஆண்டு இஸ்ரேலுடனான கைதிகள் பரிமாற்றத்தில் யாஹ்யா அல் சின்வார் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், இஸ்லாமியர்களும் யூதர்களும் தங்களது புனித இடமாகக் கருதும் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் கடந்த வாரம் மோதல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர். இதற்கு பதிலடியாக காசா முனை மீது இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: