கங்கையில் மிதக்கும் பிணங்கள்! பழிபோடும் பீகார் பழிபோகும் உத்தரப்பிரதேசம்!

558 0


இந்து மதத்தின் மிக முக்கியப் புண்ணிய நதியான கங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துபோனவர்களின் உடல்கள் வீசப்பட்டுக் கிடப்பதாகத் தகவல்கள் வெளியாகின. பீகார் மாநிலம், பக்ஸர் மாவட்டம், சௌசா கிராமத்தின் மகாதேவ் கட் வழியாகச் செல்லும் கங்கை நதியில் பல உடல்கள் மிதந்து செல்லும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. உத்தரப்பிரதேச மாநில எல்லையிலுள்ள பக்ஸர் மக்கள், “கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் வீடுகளில் இறப்பவர்களின் உடல்களை இவ்வாறு கங்கையில் தள்ளிவிடுகின்றனர்’’ எனக் குற்றம்சாட்டினர்.

கொரோனா சிகிச்சைக்குத் தேவையான சுகாதார, மருத்துவ கட்டமைப்பு இல்லாததால் நோய் பாதிக்கப்பட்ட பலர் தங்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டிய சூழல் உள்ளது. எளிய மக்களின் வீடுகளில் நோயாளிகளைத் தனிமைப்படுத்தும் வாய்ப்புகள் இல்லாததால் பல குழந்தைகளின் கண்முன்னே தாயும் தந்தையும் இறந்துபோகும் நிலையில் 40, 50 பிணங்கள் நதியில் மிதந்துவரும் காட்சி வேதனை அளிக்கிறது.

கோவிட் தொற்று ஏற்பட்டு இறப்பவர்களின் உடல்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பாதுகாப்பாக எரிக்கப்பட வேண்டும். கொரோனா இரண்டாவது அலையால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான நபர்கள் தினமும் உயிரிழப்பதால் மயானங்கள் நிரம்பி வழியும் காட்சிகளைப் பார்த்துவருகிறோம். ஆனால் உத்தரப்பிரதேசத்தின் சில கிராம மக்கள் உடல்களை கங்கையில் போட்டிருக்கும் நிகழ்வு சுற்றுவட்டார மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கங்கை புனிதத்தைப்போலவே நோய்த் தொற்றுகளையும் எப்போதும் கொண்டிருக்கும். கங்கையில் மிதக்கும் கொரோனா பாதிக்கப்பட்ட உடல்கள் பல மக்களுக்கு நோய்தொற்றைப் பரப்ப வாய்ப்புகள் உள்ளது. மிதக்கும் உடல்கள் 6, 7 நாள்கள் நீரில் ஊறியிருக்கலாம் எனத் தெரிவிக்கும் மக்கள் கரை ஒதுங்கிய பிணங்களைத் தெருநாய்கள் கடிப்பதாகவும் கூறிகின்றனர்.

பக்ஸர் மாவட்டம், சௌசா வட்டார அலுவலர் அசோக் குமார், “சம்பவம் அறிந்து நாங்கள் மகாதேவ் கட் விரைந்தபோது நதியில் வரிசையாக 40, 50 உடல்கள் மிதப்பதைப் பார்த்தோம். இதுவரை 100 பிணங்கள் சென்றுள்ளதாகப் பகுதிவாசிகள் கூறுகின்றனர். கங்கை நதிக்கரையில் பல உத்தரப்பிரதேச கிராமங்கள் உள்ளன. உடல்கள் உத்தரப்பிரதேசத்தின் எந்த கிராமத்திலிருந்து வந்திருக்கின்றன என விசாரணை நடத்துவோம். மேலும் இவை எந்தக் காரணத்துக்காகத் தூக்கி வீசப்பட்டுள்ளன என்றும், இவை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள்தானா என்றும் விசாரணையில் தெரியவரும். தற்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். சில உடல்களைக் கைப்பற்றி பாதுகாப்பாக அப்புறப்படுத்த திட்டமிட்டுள்ளோம்” எனக் கூறினார்.

பீகாரில் இறந்தவர்களின் உடலை ஆற்றில் தள்ளிவிடும் வழக்கம் இல்லாததால் இவை உத்தரப்பிரதேசத்திலிருந்து வந்தவை என பீகார் அதிகாரிகள் தெரிவித்தாலும், உத்தரப்பிரதேச அதிகாரிகள் பழியை மறுத்துவருகின்றனர். மக்கள் கோவிட் பரவும் அச்சத்தில் தவித்துவருகின்றனர். சனிக்கிழமை சில பாதி எரிந்த உடல்கள் ஹமிர்பூர் நகர், யமுனா நதியில் கண்டெடுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய காங்கிரஸ், இவை கணக்கில் காட்டப்படாத கொரோனா பாதிப்புக்கான சான்றுகள் என விமர்சித்துள்ளது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: