பாஜக எம்பி தேஜஸ்வியின் குற்றச்சாட்டு பொய்.. போலீஸ் விசாரணையில் அம்பலம்.. 17 முஸ்லீம் ஊழியர்களுக்கு மீண்டும் பணி!

780 0


கொரோனா நோயாளிகளுக்கான, படுக்கை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக பெங்களூரு தெற்கு தொகுதி லோக்சபா எம்பி பாஜக தேஜஸ்வி சூர்யா குற்றம்சாட்டியதால் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 17 ஊழியர்களும் அடுத்த வாரம் மீண்டும் பணிக்கு சேர்த்துக் கொள்ளப்பட இருக்கிறார்கள்.

பெங்களூரில் கொரோனா நோயாளிகளுக்கு பெருநகர் பெங்களூர் மாநகராட்சி மூலமாக மருத்துவமனைகளின் படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. ஆனால், ஆக்சிஜன், வென்டிலேட்டர் உள்ளிட்ட வசதிகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு படுக்கையை ஒதுக்கீடு செய்யாமல் சாதாரண நோயாளிகள் பணம் கொடுத்தால் கூட அவற்றை ஒதுக்கீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஜெயநகர் பகுதியிலுள்ள பெங்களூரு தெற்கு மண்டலத்திற்கான வார் ரூம் அலுவலகம் சென்ற பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா மற்றும் சில பாஜக எம்எல்ஏக்கள் அங்கே பணியாற்றக்கூடிய 17 முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பெயரை மட்டும் ஊடகத்துக்கு முன்பாக வாசித்துக் காட்டி, இவர்கள்தான் முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்று குற்றம் சாட்டினார்.

ஆனால், பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை நடத்திய விசாரணையில் இவர்கள் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. இதையடுத்து எடியூரப்பா அரசின் நிர்வாக தோல்வியை மூடி மறைப்பதற்காக மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி, அவர்கள் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்ப தேஜஸ்வி சூர்யா, கீழ்த்தரமான அரசியல் செய்கிறார் என்று கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தொடர்ந்து 2 அல்லது 3 நாட்களாக ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தேஜஸ்வி சூர்யா நாடு முழுக்க கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளாகினார்.

இந்த நிலையில்தான், குற்றம் செய்யாத அந்த 17 முஸ்லீம் ஊழியர்களையும் அடுத்த வாரம் முதல் பணிக்கு சேர்க்க இருப்பதாக பெருநகர் பெங்களூர் மாநகராட்சியின் தெற்கு மண்டல, சிறப்பு கமிஷனர் துளசி தெரிவித்தார். அதேநேரம் ஏஜென்சி மூலமாக இவர்கள் பணிக்கு சேர்ந்தவர்கள் என்பதால் இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்க வேண்டியது அந்த ஏஜென்சிதான் என்று அவர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக பணி ஒதுக்கீடு செய்த கிரிஸ்டல் இன்போ சிஸ்டம் மற்றும் சர்வீஸ் என்ற நிறுவனத்தை ஊடகங்கள் சார்பில், தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள், இந்த விஷயத்தில் தற்போது கருத்து கூற முடியாது என்று தெரிவித்துவிட்டனர். பணியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ள, முஸ்லிம் ஊழியர்களில் ஒருவரான ஆயிஷா கூறுகையில், மறுபடியும் பணிக்கு தங்களை சேர்த்துக் கொள்வதாக பிபிஎம்பி சார்பில், உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் என்ன பணிக்கு எங்களை மறுபடி நியமிப்பார்கள் என்று இப்போது தெரியவில்லை. பழையபடி நாங்கள் ஏற்கனவே செய்த அதே பணிக்கு நியமிக்கப்பட வேண்டும். ஏனென்றால் நியாயமே இல்லாமல் நாங்கள் குறிவைத்து விரட்டி விட்டிவிடப்பட்டோம். எனவே அதே பணியில் திரும்ப சேர்ந்தால்தான் நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை உறுதி செய்வதாக அமையும் என்று தெரிவித்தார்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: