தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு அவர் சிகிச்சை எடுத்து வருகிறார்.
நேற்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகிய நிலையில், இன்று மற்றொரு அமைச்சருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் இருவருமே அமைச்சரவையில் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சராக பதவியேற்ற இரண்டு நாட்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதால் அவர்கள் இருவரது அலுவலகங்களும் தலைமைச் செயலகத்தில் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
இதனிடையே அமைச்சர்கள் இருவருக்கும் வாழ்த்துக் கூறுவதற்காக அவர்களை சந்தித்த திமுகவினர் இப்போது இந்தச் செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமைச்சர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா சோதனை செய்து கொள்ள இருக்கிறார்கள்.
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு வெள்ளிக்கிழமை இரவு முதலே உடல் அயர்வு இருந்துள்ளது. இதனால் சனிக்கிழமை தலைமைச்செயலகத்தில் உள்ள தனது அறைக்கு கூட அவர் வரவில்லை. அதேபோல் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கும் சனிக்கிழமை காலை முதலே உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது.
ஆங்கில மருத்துவத்துடன் சித்த மருத்துவ முறைகளையும் அவர்கள் பின்பற்றுவதால் விரைவில் கொரோனாவிலிருந்து குணமடைவார்கள் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.
Your reaction