இருந்த ஒன்னும் போச்சு – கேரளாவில் வாஷ்அவுட் ஆன பாஜக!

775 0


கேரள மாநிலத்தில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. அங்கு ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கெத்தாக களம் இறங்கியது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஆளும் கட்சிக்கு கடுமையான போட்டி கொடுக்க வேண்டும் என்று களம் கண்டது. இந்த முறையாவது கேரளாவில் ஏதாவது அதிசயம் நிகழ்த்த வேண்டும் என்று பாஜக தனியாக கோதாவில் குதித்தது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் சுட்டிக்காட்டின. காங்கிரஸ் கடும் போட்டி கொடுக்கும் என்றும் கூறின. இந்த நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே ஆளும் இடது ஜனநாயக கூட்டணி முன்னணி வகித்து வந்தது. காங்கிரஸ் கட்சியும் சில இடங்களில் முன்னேறி வந்தது.

தற்போதைய நிலவரப்படி ஆளும் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கூட்டணி 41 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அதிசயம் நிகழ்த்த வேண்டும் என்று களம் கண்ட பாஜக நிலைமை மிகவும் பரிதாபமாகிவிட்டது. அந்த கட்சி போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

நெமம் தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் கும்மனம் ராஜசேகரன் படுதோல்வியை சந்தித்தார். பாலக்காடு தொகுதியில் போட்டியிடும் மெட்ரோ மேன் ஸ்ரீதரனும் தோல்வியை தழுவியுள்ளார். கடந்த 2016 தேர்தலில் கூட ஒரு இடத்தில் வெற்றி பெற்ற இந்த முறை முழுவதுமாக ஒயிட்-வாஷ் ஆனது. பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் கேரளாவுக்கு வந்து பலமுறை சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.

ஆனால் இவை பலன் அளிக்காமல் போய் விட்டது. மேலும் இந்த முறை பாஜக சபரிமலை விவகாரத்தை கையில் எடுத்தது. ஆளும் கட்சி ஐயப்ப பக்தர்களை துன்புறுத்துகிறது என்று பல்வேறு பிரசாரத்தை முன்வைத்தது பாஜக. ஆனால் இவை எதுவும் எடுபடாமல் போய் விட்டது. இது தவிர மெட்ரோ மேன் ஸ்ரீதரனை முதலில் முதல்வர் வேட்பாளராக அறிவித்தது பாஜக. ஆனால் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பாஜகவில் பதவி கிடையாது என்பதால் சர்ச்சை எழுந்ததால் இந்த கருத்தில் இருந்து பின்வாங்கியது.

பாஜக மெட்ரோ மேன் ஸ்ரீதரனுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருப்பதால் அவரை வைத்தே மக்களிடம் காய் நகர்த்தியது பாஜக. ஆனால் தற்போதும் அனைத்தும் பயன் அளிக்காமல் சென்று விட்டது. இவை எதற்கும் வளைந்து கொடுக்காத சேட்டன்கள் பாஜவுக்கு பலத்த அடியை கொடுத்து நாங்கள் காம்ரேடுகள் பக்கம்தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: