பிரச்சாரத்திற்கு பின் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடுகள்!

676 0


தமிழக சட்டசபைத் தேர்தலில் பலமுனை போட்டி நிலவுகிறது. கடந்த 15 நாட்களாகவே தமிழகத்தில் வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாளையுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது. கடைசி நாள் என்பதால் இரவு 7 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்னர் இரவு 7 மணி முதல் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த உத்தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடக்க இருக்கிறது. தேர்தல் பிரச்சாரம் 4 ஆம் தேதி இரவு 7 மணிக்கு முடிவடைகிறது. அதன் பிறகு, தேர்தல் சம்பந்தமான பொதுக்கூட்டமும் ஊர்வலமும் நடத்தக்கூடாது. தேர்தல் சம்பந்தமாக சினிமா தியேட்டர் மூலமாகவோ, தொலைக்காட்சி மூலமாகவோ அல்லது வேறு எந்த எலக்ட்ரானிக் பொருட்கள் மூலமோ பிரச்சாரங்களை வெளியிடக்கூடாது. இசை நிகழ்ச்சிகள் மூலமாகவும், வேறு எந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலமாகவும் பொதுமக்களை கவர்கின்ற வகையில் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது. இவைகள் மீறப்பட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

ஒரு சட்டசபைத் தொகுதியின் வாக்காளராக இல்லாத வெளியாட்கள் அனைவரும் 4 ஆம் தேதி இரவு 7 மணிக்குள் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். ஒருவேளை அந்த குறிப்பிட்ட தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் வேறு தொகுதியில் வாக்காளராக இருந்தாலும், அவரை வெளியே செல்ல கட்டாயப்படுத்தக்கூடாது. ஆனால், அதே சமயம் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது.

தொகுதியின் வாக்காளர் இல்லாத வெளியாட்கள் அனைவரும் 4 ஆம் தேதி இரவு 7 மணிக்குள் வெளியேறிவிட்டார்களா என்பதை உறுதி செய்ய, அந்தந்த தொகுதியில் அமைந்துள்ள கல்யாண மண்டபங்கள், சமூக நலக்கூடங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் விருந்தினர் இல்லங்கள் தேர்தல் ஆணைய அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட வேண்டும். சட்டசபைத் தொகுதிக்கு வெளியிலிருந்து உள்ளே வரும் வாகனங்களை பரிசோதனை செய்ய அந்தந்த தொகுதியின் எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட வேண்டும். பிரச்சாரத்திற்காக அனுமதிக்கப்பட்ட வாகனங்களின் அனுமதி 4 ஆம் தேதி இரவு 7 மணியுடன் முடிவடைந்துவிடும்.

தேர்தல் நாளன்று ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி பெற முடியும். அதாவது, தன்னுடைய பயன்பாட்டிற்கான ஒரு வாகனம், தன்னுடைய தேர்தல் பொது முகவர் பயன்பாட்டுக்கான வாகனம், வேட்பாளருக்காக அல்லது கட்சிக்காக பணியாற்றுபவர்களுக்கான வாகனம் ஆகியவை ஆகும்.

இந்த 3 வாகனங்களுக்கும் அளிக்கப்படும் அனுமதி, வாக்குப்பதிவு நாள் அன்றைக்கு மட்டுமே செல்லுபடி ஆகும். அனுமதிக்கப்பட்ட இந்த 3 வாகனங்களை மட்டுமே வாக்குப்பதிவு நாளன்று பயன்படுத்தப்பட வேண்டும். வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வரவும், திரும்ப சென்று அவர்களை வீட்டில் விடவும் எந்தவிதமான வாகனங்களையும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வைத்துக்கொள்ளக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் அது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தண்டனைக்கு உரியதாகும்.

வாக்குச்சாவடி இருக்கும் இடத்தில் இருந்து 200 மீட்டர் தள்ளி தேர்தல் நாள் பணிகளுக்காக தற்காலிக பூத் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளலாம். அதில் அந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் வாக்காளராக உள்ள 2 பேர் மட்டுமே இருக்க வேண்டும். அந்த இடத்தில் உணவு பொருட்கள் எதுவும் வழங்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: