புதுடெல்லி: ப்ளூ வேல் போன்ற இணையதள விளையாட்டுக்களை தடை செய்வது இயலாத காரியம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ப்ளூ வேல் விளையாட்டால் பலர் பலியாவதை அடுத்து இதுபோன்ற விளையாட்டுக்களை தடை செய்ய உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுக்களை தடை செய்யாதது ஏன் எனவும், இதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அரசு பதிலளிக்க அக்டோபர் மாதம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து இந்த வழக்கு இன்று வழக்கு விசாரணைக்கு வந்து. அப்போது, ப்ளூ வேல் போன்ற ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய முடியாது. ஏனெனில் அவை ஆப்ஸ் சார்ந்த விளையாட்டுக்கள் எனவும், பல்வேறு காரணங்களால் குழந்தைகள் தற்கொலை செய்ததை ஊடகங்கள் பெரிதுப்படுத்திவிட்டன என்றும் மத்திய அரசு பதில் தெரிவித்தது. இந்த பதிலில் திருப்தியடையாத தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இதுபோன்ற மரணத்தை விளைவிக்கும் விளையாட்டுக்கள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு அறிவுறுத்தும்படி தெரிவித்துள்ளது.
மேலும், ப்ளூ வேல் விளையாட்டு ஒரு தேசிய பிரச்சனை. மாநிலங்களில் இயக்கப்படும் தூர்தர்ஷன் மற்றும் தனியார் டிவி சேனல்களும் இத்தகைய மரண விளையாட்டுக்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த அரசுக்கு உதவ வேண்டும் என தனது முந்தைய கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இத்தகைய விளையாட்டுக்களால் ஏற்படும் ஆபத்துகளை உணர்த்தும் வகையிலான பிரத்யேக நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது
Your reaction