தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் அ.ம.மு.க., அலுவலகத்தில் பணம் சிக்கிய அறைக்கு பாதுகாப்பளித்த போலீசார் மீது தாக்குதல் முயற்சி நடந்தது. இதையடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
அ.ம.மு.க., சார்பில் தேனி லோக்சபா தொகுதியில் தங்கதமிழ்செல்வன், ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் ஜெயகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஆண்டிபட்டியில் கட்சி அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. டி.எஸ்.பி.,சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் கட்சி அலுவலகம் செயல்பட்டு வந்த வணிக வளாகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். மாடியில் ஒரு அறையில் சிலர் பணத்தை எண்ணிக்கொண்டிருந்தனர். பறக்கும்படையை கண்ட அவர்கள் பணத்தை போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனை தொடர்ந்து அந்த அறையை பூட்டி பறக்கும் படையினர் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். அப்போது திடீரென்று வந்த 50-க்கும் மேற்பட்ட கும்பல் வணிக வளாகத்தின் அனைத்து விளக்குகளையும் அணைத்து இருளில் மூழ்க செய்தனர். வளாகத்தின் கதவுகளை உடைத்து பணம் இருந்த அறைக்கு செல்ல முயன்றனர். பாதுகாப்பு போலீசார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி மூன்று முறை சுட்டனர்.
இதையடுத்து கும்பல் தப்பியோடியது, சிறிது நேரம் என்ன நடக்கிறது என்று தெரியாமல் உள்ளிருந்து தகவல் கிடைக்காமல், யாரும் உள்ளே செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
அரை மணி நேரத்திற்குப்பின் தேனி எஸ்.பி.,பாஸ்கரன் தலைமையில் அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் பணம் சிக்கியதாக தகவல் பரவியது. தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் இல்லை. கலெக்டர் பல்லவி பல்தேவ், டி.ஆர்.ஓ., கந்தசாமி நேரில் விசாரித்தனர். பணம் எண்ணும் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன.
Your reaction