வேட்பாளர்கள் தேர்வில் முஸ்லிம்களை புறக்கணித்த திமுக, அதிமுக !

1439 0


மக்களவைத் தேர்தல் பணிகள் வேகமெடுகத்துவிட்டன. தேர்தலுக்குத் தயாராகும் வகையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டன.

இந்த வேட்பாளர் பட்டியலில் இரு அம்சங்களை குறிப்பிட்டாக வேண்டும். ஒன்று ‘வாரிசு அரசியல்’, இரண்டாவது ‘முஸ்லிம்’ சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கூட இடமளிக்காதது.

இதில் திமுக கூட்டணியில் இந்தியன் முஸ்லிம் லீக் கட்சி இருக்கிறது என்றாலும், திமுக அறிவித்த 20 இடங்களில் ஒருவர் கூட முஸ்லிம் வேட்பாளர் இல்லை, அதிமுக அறிவித்த 20 இடங்களிலும் இல்லை. பாஜக தான் போட்டியிடும் 5 தொகுதிகளிலும் முஸ்லிம் வேட்பாளர் இருக்கப் போவதும் இல்லை.

தமிழகத்தின் பிரதான கட்சிகளாக இருக்கும் திமுகவும் அதிமுகவும் முஸ்லிம், உள்பட சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகள் முக்கியத்துவம் எனக் கருதும் அதேவேளையில், தாங்கள் அறிவித்த வேட்பாளர்களில் சிறுபான்மை மக்களுக்கான உரிய பிரதிநிதித்துவத்தை அளிக்கத் தவறிவிட்டனவா என்ற கேள்வி எழுகிறது.

தமிழகத்தில் கணிசமான அளவில் ஏறக்குறைய 6 சதவீதம் அளவில்  இருக்கும் முஸ்லிம் சமூகத்தில் இருந்து ஒருவர் கூட முன்னிலைப்படுத்தாதது வேதனைக்குரியது. நாடாளுமன்ற பிரதிநித்துவம் என்பது அனைவரின் பங்களிப்பும், பிரதிநிதித்துவமும் கலந்ததாக இருக்க வேண்டுமே தவிர ஒருசாரரைப் புறக்கணித்து விட்டு செல்வது ஜனநாயகத்துக்கு அழகும் அல்ல, ஆரோக்கியமானதாகும் அல்ல. நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களின் குரல் எவ்வாறு தமிழகத்தில் இருந்து ஒலிக்கும். ஒரு சாரரைப் புறக்கணித்துவிட்டு செயல்படும் ஜனநாயகம் முழுமையான ஜனநாயகமாக இருக்காது.

சிறுபான்மை மக்களின் நலம் விரும்பிகள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் முஸ்லிம்களுக்கான இடம் என்பது கூட்டணிக்கட்சி அளவில்தான் என்று இந்தத் தேர்தலில் சுருக்கிக் கொண்டுவிட்டன.

மத்திய சென்னை தொகுதியை எடுத்து கொண்டால், இஸ்லாமியர்கள் இங்கு அதிகம். இந்த தொகுதிக்குள், ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை, எழும்பூர், சூளை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, பெரியமேடு என பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் கணிசமாக உள்ளனர். அதிமுக கூட்டணியில் பாமக தரப்பில் சாம்பால் என்பவரும், திமுகவின் தயாநிதி மாறனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அப்பட்டமான இஸ்லாமியர்கள் வாழும் பகுதி என்று தெரிந்தும், அதிமுக இந்த தொகுதியை ஏன் தவிர்த்துள்ளது என்பதும், வாரிசு அரசியலில் சிக்கி எழ முடியாத அளவில் திமுக ஏன் தவித்து வருகிறது என்பதும் புரியாத புதிராக உள்ளது. மத்திய சென்னை ஒரு உதாரணம்தான்.. இஸ்லாமிய சமுதாயத்தினர் வாழும் பகுதிகளில் மாற்று சமூக வேட்பாளரை நிறுத்தினால் ஓட்டுக்கள் பிரியும் என்ற நிலை இருந்தும், எதற்காக அதிமுக, திமுக இரு கட்சிகளுமே இச்சமுதாயத்தினரை தள்ளி வைத்து பார்க்கிறது.

பொதுவாக தமிழகத்தில் இஸ்லாமியர்கள் ஜாதி மதம் பார்த்து வாக்களிப்பதில்லை. அந்த நாகரீகத்தை அவர்கள் இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள். அதேபோல, எந்த இஸ்லாமிய பிரதிநிதியும் இஸ்லாமியர்களுக்கான பிரதிநிதியாக இருந்தது இல்லை. ஒவ்வொருவரும் தங்கள் கட்சிக்கான பிரதிநிநிதியாக மட்டுமே செயல்பட்டுள்ளனர். இது கடந்த கால வரலாறு நமக்கு புகட்டிய பாடம்.

ஆனால் இப்படி இருந்தும்கூட, தேர்தல் சமயங்களில் சிறுபான்மையினரை ஓட்டு வங்கியாக பார்க்கும் அவலம் இன்றும் தொடர்வது வேதனையாக உள்ளது. திமுக, அதிமுக இரு பிரதான கட்சியுமே சிறுபான்மை மக்களின் அதிருப்தியை அறுவடை செய்துவிட்டார்கள். அப்படியானால் இச்சமூகத்தினரின் எதிர்ப்பு ஓட்டுக்கள் நாளை யாருக்கு சாதகமாக அமைய போகிறது ?!

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: