பிறர் மானத்தில் கை வைக்காதீர்கள்!

3452 0


அல்லாஹ் மனிதர்களை பல பாவங்களுக்கு மத்தியில் படைத்துள்ளான். மனிதன் பாவம் செய்து விட்டால் அதற்கான பரிகாரமான தவ்பாவையும் ஏற்பாடு செய்து, மனிதன் தான் செய்த பாவத்தை எண்ணி, மனம் வருந்தி படைத்தவனிடம் மன்றாட வேண்டும் என்பதை அல்லாஹ் நமக்கு அழகான முறையில் வழிக் காட்டியுள்ளான்.

பாவத்தை இஸ்லாம் இரண்டாக பிரிக்கிறது. முதலாவது மனிதன் அல்லாஹ்விற்கு செய்யும் பாவங்கள். இரண்டாவது மனிதன் மனிதனுக்கு செய்யும் பாவங்களாகும். முதலாவது பாவமான மனிதன் அல்லாஹ்விற்கு செய்யும் பாவத்தைப் பொருத்த வரை அதாவது அல்லாஹ் கடமையாக்கிய கடமைகளை நிறைவேற்றவில்லை என்றால், அதற்கு அல்லாஹ்விடமே நேரடியாக பாவ மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது அல்லாஹ் தடுத்த காரியங்களை (பாவங்களை ) செய்து விட்டாலும் அதற்கும் அல்லாஹ்விடமே நேரடியாக பாவ மன்னிப்பு கேட்க வேண்டும்.

இரண்டாவது பாவமான மனிதன் மனிதனுக்கு செய்யும் பாவம் என்றால் ஒரு மனிதனை அடிப்பது, அல்லது ஏசுவது, அல்லது இரத்தத்தை ஓட்டுவது, அல்லது கொலை செய்வது. அல்லது சொத்துக்களை அநியாயமாக அபகரிப்பது, அல்லது அநாதைகளுடைய சொத்துகளை அநியாயமாக சாப்பிடுவது, இப்படியான ஏதாவது ஒரு பாவத்தை செய்து விட்டால், சம்பந்தப்பட்வரிடம் அதற்கான பரிகாரத்தை செய்து விட்டு பிறகு அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேட வேண்டும். இல்லாவிட்டால் மறுமையில் இவர் முப்லிஸாக (நன்மையை இழந்து) நரகத்திற்கு உரியவராக காணப்படுவார்.

இங்கு நான் உங்கள் சிந்தனைக்கு கொண்டு வருவது என்னவென்றால், ஒரு மனிதன் ஒரு பாவத்தை செய்து விட்டான். உதாரணமாக விபச்சாரம் செய்து விட்டான், அல்லது அதற்கு நெருக்கமான பாவம் ஒன்றை செய்து விட்டான் என்று வைத்துக் கொள்வோம். அல்லது இஸ்லாம் தடுத்த  இது போன்ற வேறொரு ஏதாவது ஒரு பாவத்தை செய்து விட்டால், இந்த பாவம் செய்த மனிதரை எப்படி அணுக வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு சொல்லியுள்ளது என்பதை உள்வாங்கி அந்த விசயத்தில் ஈடுபட வேண்டும்.

இஸ்லாமிய சட்டத்தை நிறைவேற்றக் கூடிய இஸ்லாமிய ஆட்சி அதிகாரம் உள்ள நாடு என்றால், குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அதற்கான தண்டனையை நிறைவேற்றும், இஸ்லாமிய அல்லாத நாடாக இருந்தால் அந்த பாவத்திற்கான பரிகாரத்தை அல்லாஹ்விடமே மன்றாட வேண்டும். அந்த பாவத்தை மன்னிப்பது. அல்லது மன்னிக்காமல் இருப்பது அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளதாகும். அதே நேரம் பாவம் செய்த மனிதனை பலருக்கு மத்தியில் சீரழிக்க வேண்டும், கேவலப்படுத்த வேண்டும் என்று யார் ஈடுபடுகிறாறோ, அதற்கான பரிகாரத்தை தேடிக் கொள்ளாவிட்டால் அவரின் இம்மை மற்றும் மறுமை வாழ்வு மோசமாக மாறிவிடும் என்று அல்லாஹ் எச்சரிக்கிறான்.

தனது எதிரி, அல்லது இவர் அடுத்த ஜமாஅத்தை சார்ந்தவர், அல்லது தனக்கு வேண்டாதவர், அல்லது தனக்கும் இப்படி தான் இவர் செய்தார், என்றடிப்படையில் சமூக வலை தலங்களிலும், துண்டு பிரசுரங்கள், மற்றும் போஸ்டர்கள் மூலம் சம்பந்தப்பட்டவரை அசிங்கப்படுத்தி குளிர் காய்வதை காணலாம். மானக்கேடான விசயங்களை யார் திட்டமிட்டு பரப்புகிறாறோ அவருக்கு அடிப்படை மார்க்க அறிவு இல்லாதவர் எனபதை விளங்கிக் கொள்ளலாம். அது மட்டுமல்ல அல்லாஹ்வுக்கும், நபியவர்களுக்கும், எதிராக செயல்படக் கூடியவர்கள் என்பதையும் குர்ஆன் உறுதிப்படுத்துகிறது.

ஒருவனுடைய குறைகளை மறையுங்கள், பேசினால் நல்லதை பேசுங்கள், இல்லாவிட்டால் மௌனமாக இருங்கள், தன் நாவினாலும், கையினாலும் பிறருக்கு இடைஞ்சல் கொடுக்காதவரே முஸ்லிம், பிறரை மானபங்கப்படுத்துவது புனித கஃபாவை இடிப்பதற்கு சமம், புறம் பேசி திரியாதீர்கள், என்று இப்படி பல செய்திகளை நபியவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் நாங்கள் குர்ஆன், ஹதீஸ் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் இந்த ஹதீஸ்களை மதிக்காமல் அல்லது முக்கியத்தும் கொடுக்காமல் மார்க்கத்தின் பெயரால் நபியவர்களுக்கு எதிராக ஈடுபடுவதை காணலாம். மறுபுறம் பின்வரும் குர்ஆன் வசனங்களை பறக்கணிப்பதன் மூலம் அல்லாஹ்விற்கு எதிராக செயல் படுவதையும் காணலாம்.

 “எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.(24-19)

மானக்கேடான விசயம் பரவ வேண்டும் என்பதற்காக வரிந்துக்கட்டிக் கொண்டு ஈடுபடக் கூடியவர்கள் மேற்ச்சென்ற குர்ஆன் வசனத்தின் எச்சரிக்கையை பயந்து கொள்ள வேண்டும். இன்று நாம் பரப்பினால், என்றாவது ஒரு நாள் இப்படியான மானக்கேடான விசயத்தில் அல்லாஹ் நம்மையும் சிக்க வைத்து, பிறரின் மூலம் சீரழிப்பான் என்பதை தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வுடைய கட்டளையை மீறி செயல் படக் கூடியவர்களுக்கு முடிவு விபரீதமாக அமைந்து விடும். ? இப்போது இவரை சிக்க வைத்து விட்டோம் என்ற மமதையில் இருக்கலாம், தான் தோண்டிய அதே குழியில்  ஒரு நாள் இவர் விழுவது நிச்சயம், இல்லாவிட்டால் மேற்ச் சென்ற குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் பொய்யாகி விடும்.

இந்த இடத்தில் முக்கியமான சில விசயங்களை கவனிக்க வேண்டும்.பிறரை மானபங்கப்படுத்தும் விதமாக தன் அமைப்பைச் சார்ந்தவர்கள் அசிங்கமாக பேசும் போது அந்த அமைப்பின் தலைவரோ, அல்லது முக்கிய உறுப்பினர்களோ அதை கண்டிப்பது கிடையாது, அல்லது அதை தடுத்து நிறுத்துவதும் கிடையாது, மாறாக அவர்களும் சேர்ந்து வேடிக்கைப் பார்த்து குளிர் காய்வதை காணமுடிகிறது. அந்த நேரத்தில் இது போல பல குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் எடுத்துக் காட்டி அப்படி பேசாதீர்கள் என்று எடுத்துக் காட்டினாலும், எவற்றையும் கண்டுக் கொள்ளாமல் நாங்கள் நிரூபிக்க தயார், நீங்கள் சத்தியம் செய்ய வருவீர்களா என்ற வீர வசனங்கள். அதே நேரம் அதே போல குற்றச்சாட்டுகள் தன் தலைவருக்கோ, அல்லது தனது நெருங்கியவருக்கோ, அல்லது தனது நண்பருக்கோ வந்து விட்டால் அப்போது தான் அந்த வேதனை இவர்களுக்கும் புரிய ஆரம்பிக்கிறது. இப்போது சம்பந்தப்பட்ட குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்களை எடுத்துக் காட்டி இப்படி பரப்பாதீர்கள், அது பெரிய பாவம், என்று பேச ஆரம்பிக்கிறார்கள். பிறரை மானபங்கப்படுத்தும் போது விளங்காத குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் தனது நேசத்திற்குரியர் அதே குற்றச்சாட்டில் சிக்கியவுடன் விளங்க ஆரம்பிக்கிறது. வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான். தனக்கு என்று வரும் போது படக்கு, படக்கு என்று இருக்குமாம்.

எனவே யாராக இருந்தாலும் அல்லாஹ்வுடைய கட்டளையை மீறி இப்படியான மானபங்கப்படுத்தும் விசயத்தில் ஈடுப்பட்டால். அதனுடைய பின் விளைவுகளை இவ்வுலகிலும், மறுவுலகிலும் கட்டாயம் அனுபவித்தே ஆக வேண்டும் என்பதை மறந்து விட வேண்டாம். சிந்தனைக்கு ஒரு குர்ஆன் வசனம்

“இன்னும், அவர்கள்  (முஃமின்கள்) வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.(23- 03)

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: