ஓகே.. கூட்டம் கூட்டியாச்சு.. பேரணியும் போயாச்சு… அழகிரி சாதித்தாரா ? சறுக்கினாரா ?

1791 0


கருணாநிதி மறைவிற்கு பின்னர், இதுவரை அழகிரியால் திமுகவிற்குள் நுழைய முடியவில்லை. எத்தனைய விதமான பேட்டிகளை, பல பல வடிவங்களில் கொடுத்து பார்த்தும் திமுக தலைமை எதற்கும் மசியவில்லை,

அதோடு மூத்ததலைவர்களை இழுத்து போட்டு வளைத்து கொள்ளுவது , அழகிரி விசுவாசி நிர்வாகியை நீக்கம் செய்வது என தீவிரமான எதிர்ப்பு நடவடிக்கையிலும் இறங்கிவிட்டனர். திமுக தலைமை என்ன செய்தாலும் , கடைசிவரை பேரணியை நடத்தியேதான் தீருவேன் என்று ஒற்றை காலில் நின்றார் அழகிரி.

கருணாநிதி மறைவிலிருந்தே அழகிரியின் அணுகுமுறை ஒரே தடால்புடால்தான் ! திமுகவில் அழகிரி என்றாலே அதிருப்தி என்று கருணாநிதி இருந்தபோதே நிலவி வருகிறது. அப்படியென்றால் கருணாநிதி மறைவுக்கு பின் அழகிரி என்ன செய்திருக்க வேண்டும் ? ஏற்கனவே அதிருப்தி உள்ள நிலையில் கால , நேரம் , சூழல் வரும்வரை அமைதி காத்திருக்க வேண்டும். இல்லையென்றால் தம்பி என்ற உறவு , உரிமையில் ஸ்டாலினிடம் மனம் விட்டு பேசியிருக்க வேண்டும் , அதுவும் இல்லையென்றால் , கட்சியின் மூத்த தலைவர்களுடன் கலந்து பேசி ஆலோசனைகளை பெற்று , தன் தரப்பு விளக்கம் , நியாயங்களையும் கொடுத்திருக்க வேண்டும். இதையெல்லாம் அழகிரி செய்தாரா?

கருணாநிதி சமாதியில் நின்று சவால் விட்டதிலிருந்து , ஒவ்வொரு பேட்டிகளின் போதும் ஏதாவது ஒரு பகீர் விஷயத்தை கிளப்பி விட்டது வரை எல்லாமே பக்குவமற்ற வேகமான செயல்கள்தான். முதலில் இந்த பேரணியை அழகிரி நடத்தி இருக்க வேண்டிய அவசியமே இல்லை. எதற்காக நடத்தினார் ? தன் பக்கம் எவ்வளவு தொண்டர்கள் என்ற பலத்தை நிரூபிக்கத்தானே ?

ஒரு லட்சம் பேர் திரள்வார்கள்… சென்னையை ஸ்தம்பிக்க வைக்க போகிறேன் என்றாரே… இந்த பேரணியில் ஒரு லட்சம் பேர் வரவில்லை என்பதே உண்மை. கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் தான் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த மக்களும் பெரும்பாலும் தென்தமிழகத்தை சேர்ந்தவர்கள்தான் !! இன்னும் சொல்லப்போனால் அதிமுக உறுப்பினர்களும் இதில் களமிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எந்த கூட்டம் என்றாலும் அதற்கு ஆட்களை திரட்டுவது என்பது எளிதான காரியமே. பணம் இருக்கும் யார் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பத்தாயிரம் பேரை வைத்துக் கொண்டு அழகிரி என்ன செய்ய போகிறார் ? ஒருவேளை வந்தது ஒரு லட்சம் பேர் என்றே கூட வைத்து கொள்வோம். அந்த ஒரு லட்சம் தொண்டர்களை வைத்தும் என்ன செய்ய போகிறார் ? உதயசூரியன் என்றால் ஸ்டாலின்தான் என்ற நிலைமை வந்துவிட்டது. அதோடு திமுக ஒரு பேரணியை நடத்துகிறது என்றால் குறைந்தபட்சம் அதில் 50 ஆயிரம் பேர் வருகிறார்கள். திமுக ஒரு மாநாடு நடத்துகிறது என்றால் 2 லட்சத்திற்கும் மேல் தொண்டர்கள் திரள்வார்கள். இதை அழகிரியே கடந்த காலங்களில் அறிந்திருப்பாரே ?

ஆனால் அழகிரி பேசிய பேச்சிற்கும் , சவாலுக்கும் , கோபத்திற்கும் வந்திருந்த ஆட்கள் குறைவுதான். தன் பலத்தை அடுத்தவர்களுக்கு நிரூபிக்க பேரணி நடத்துகிறேன் என்ற அழகிரி , முதலில் தன் பலத்தை இதன்மூலம் தெரிந்து கொள்ளட்டும். அந்த பேரணியில் யாராவது கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டார்களா ? நிர்வாகிகளும், மூத்த தலைவர்களும் இல்லாத பேரணி எந்த அளவுக்கு அரசியல் பலம் பொருந்தியதாக இருக்கும்?

சரி தன் நிலைப்பாடு குறித்து பேரணி முடிவில் பேசுவார் என்று பார்த்தால் , அதுவும் புஸ்வாணம்தான். இனி தன் ஈகோவை விட்டு ஸ்டாலினிடம் சென்றாலும் அது எடுபடாது. ஆனால் அழகிரியை ஒரு விஷயத்தில் பாராட்டியே ஆகவேண்டும். கடந்த சில நாட்களாக, எவ்வளவோ மன உளைச்சல்களுக்கும், வேதனைகளுக்கும் உள்ளாகி வந்து கொண்டிருந்தாலும், கடைசியில் சொன்னபடி பேரணியை நடத்தி காட்டி விட்டார். இதை நாம் மறுக்க முடியாது.

அதே வேளையில் மூத்த நிர்வாகிகள் யாருமே இல்லாத , ஒரு குறைவான கூட்டத்தை வைத்து அழகிரி அரசியல் களத்தில் நிற்கவும் முடியாது. தனியாக கட்சி தொடங்கவும் முடியாது. காங்கிரசுடன் சேரவும் முடியாது. பாஜகவுடன் சேர்ந்தால் திமுகவை இன்றுடன் மறந்தே போய்விட வேண்டியதுதான். எப்படியோ இந்த பேரணி அழகிரிக்கு ஒரு பின்னடைவுதான்!

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: