பேனாக்களை ஒடிப்பதால் சிந்தனைகளை என்ன செய்துவிட முடியும் ?

1586 0


சையது சுஜாத் , காஷ்மீரில் இயங்கிவரும் `ரைஸிங் காஷ்மீர்’ என்ற பத்திரிகையின் முதன்மை ஆசிரியர். மாலை அலுவலகத்திலிருந்து வீட்டுக்குப் பயணிக்க இருந்தவரை இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டது. கார் கண்ணாடிகளிடையே புகுந்து சென்ற புல்லட் துளைத்ததில், சம்பவ இடத்திலேயே அவரும் அவரது தனிப் பாதுகாவலரும் உயிரிழந்தார்கள். மற்றொரு பாதுகாவலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு உயிரிழந்தார். அவரது இறப்பு பற்றிய செய்தியை வெளியிட்டிருக்கும் `ரைஸிங் காஷ்மீர்’ பத்திரிகை, ‘ Shujaat Silenced’ என்று செய்தி வெளியிட்டிருந்தது.

மரணத்துக்குச் சில மணிநேரம் முன்புகூடத் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ஐ.நா சபை முதன்முறையாக காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்குறித்து சர்வதேச விசாரணைக் குழு அமைக்கும்படி வலியுறுத்தியிருந்ததைக் குறிப்பிட்டுப் பதிவுசெய்திருந்தார். சமீபத்தில், தீவிரவாதிகள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு இடையே, எல்லைக் காவல் படையினர் ஐந்து இளைஞர்களைச் சுட்டுக் கொன்றதைப் பற்றி அவர் தனது பத்திரிகைத் தலையங்கப் பகுதியில் குறிப்பிட்டிருந்தார். கடந்த மே மாதம் அனுசரிக்கப்பட்ட சர்வதேச பத்திரிகைச் சுதந்திர தினத்தையொட்டி ‘Journalism Under fire’ என்கிற தலைப்பில் அவர் எழுதிய தலையங்கத்தில், இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் கொல்லப்பட்டுவரும் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுகுறித்து வருத்தத்துடன் பதிவுசெய்திருந்தார்.

2017/18-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 18. அவர் மேற்கோள் காட்டிய எண்ணிக்கையில், தற்போது அவரது ரத்தக்கறைகளும் படிந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில்தான் கர்நாடகாவின் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், அடையாளம் தெரியாத நபர்களால் அவரது வீட்டு வாசலிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இறந்த அதே மாதம், திரிபுராவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சாந்தனு பௌமிக் , கடந்த மார்ச் மாதத்தில் கொல்லப்பட்ட தைனிக் பாஸ்கர், பத்திரிகையாளர் நவீன் நிஸ்சால் என இந்த மரணங்களின் பட்டியல் நீள்கிறது. தேசத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் பத்திரிகை உலகின் கருத்துச் சுதந்திரம் மரணங்களால் அடக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

காஷ்மீரில் நடந்துவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆவணங்கள் தொடர்ந்து பதிவுசெய்யப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. ராஷ்மி சக்ஸேனா என்னும் பத்திரிகையாளர் சமீபத்தில் எழுதி வெளியிட்ட ‘She goes to war’ என்னும் புத்தகம், அதற்கான மற்றொரு சாட்சியம். தீவிரவாதத்தாலும் மற்றொருபுறம் காவல் துறையினராலும் காஷ்மீர் பெண்கள் பாதிக்கப்படுவதுகுறித்து அந்தப் புத்தகத்தின் ஒரு பகுதி பேசுகிறது. காஷ்மீர் பகுதிப் பெண்களே தங்களுக்கான கூட்டமைப்பை உருவாக்கி, பெண்கள் மற்றும் சிறுவர் – சிறுமியர்மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ந்து குரலெழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

மறைவுகளுக்குள்ளும் நிகழும் மனித உரிமை மீறல்களைச் சர்வதேசத்திடம் தன் எழுத்தின் வழியாகப் பதிவுசெய்ததுதான், சுஜாத் இறப்புக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

பேனாக்கள் ஒடிக்கப்படுவதால் சிந்தனைகளுக்கு எப்படி முட்டுக்கட்டை போடமுடியும் ? மரணங்கள் மௌனமாக எழுப்பும் கேள்விகளுக்கு வலிமை அதிகம் !

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: