ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தஞ்சை மாநகராட்சி ஆணையர் கைது.!!

2421 0


காலிமனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தஞ்சை மாநகராட்சி ஆணையர் வரதராஜ் கைது செய்யப்பட்டார்.

 

தஞ்சை கீழவஸ்தாசாவடியை சேர்ந்தவர் சம்பந்தம்(வயது60). ரெயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தஞ்சை வண்டிக்காரத்தெரு பகுதியில் உள்ள 15 ஆயிரத்து 509 சதுரஅடி காலிமனைக்கு வரி நிர்ணயம் செய்வதற்காக கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தார். ஆனால் முறையான ஆவணங்கள் இல்லை என கூறி வரி நிர்ணயம் செய்யப்படாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்தனர்.

தஞ்சை வடக்குவீதியை சேர்ந்தவர் பொன்.நாகராஜ்(54). இவர் அ.தி.மு.க. வட்ட செயலாளராகவும், நகர எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர். மேலும் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இடைத்தரகராகவும் செயல்பட்டு வந்தார்.

பொன்.நாகராஜை சென்று பார்த்தால் வேலை சீக்கிரம் முடியும் என சம்பந்தத்திடம் மாநகராட்சி ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர். அதன்படி அவர், பொன்.நாகராஜை சந்தித்து காலிமனைக்கு வரி நிர்ணயம் செய்து ரசீது பெற்று தரும்படி கூறினார். லஞ்சம் கொடுத்தால் சீக்கிரம் வேலை முடிந்துவிடும் என கூறி சம்பந்தத்தை தஞ்சை மாநகராட்சி ஆணையர் வரதராஜிடம், பொன்.நாகராஜ் நேரில் அழைத்து சென்றார்.

அப்போது காலிமனையின் மதிப்பு அதிகமாக இருப்பதால் வரி நிர்ணயம் செய்வதற்கு ரூ.1 லட்சம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் வரதராஜ், சம்பந்தத்திடம் கூறினார். அவ்வளவு பணம் தன்னால் தர முடியாது என்று சம்பந்தம் கூறியதால் இறுதியாக ரூ.75 ஆயிரம் கொடுத்தால் வேலை முடியும் என வரதராஜ் கூறினார்.

லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத சம்பந்தம் தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மாநகராட்சி ஆணையரையும், இடைத்தரகரையும் கையும், களவுமாக பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். இதன்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.75 ஆயிரத்தை சம்பந்தத்திடம் போலீசார் கொடுத்து அதை மாநகராட்சி ஆணையரிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.

நேற்று மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற சம்பந்தம், அங்கிருந்து பொன்.நாகராஜை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அவர் வந்தவுடன் 2 பேரும் மாநகராட்சி ஆணையரை சந்திக்க அவரது அறைக்கு சென்றனர். அங்கு ஆணையர் வரதராஜ் அமர்ந்து இருந்தார். அவரிடம் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை சம்பந்தம் கொடுத்தார். அதை கையில் வாங்காமல் பொன்.நாகராஜிடம் கொடுத்துவிடுங்கள். நான் வாங்கி கொள்கிறேன் என ஆணையர் வரதராஜ் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பொன்.நாகராஜிடம் ரூ.75 ஆயிரத்தை சம்பந்தம் வழங்கினார். அந்த ரூபாய் நோட்டுகளை அவர் வாங்கியவுடன் அலுவலகத்துக்கு வெளியே மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக அலுவலகத்துக்குள் நுழைந்து கையும், களவுமாக பொன்.நாகராஜை பிடித்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியபோது, மாநகராட்சி ஆணையர் வரதராஜ் பணத்தை வாங்க சொன்னதால் லஞ்சமாக கொடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வாங்கியதாக வாக்குமூலம் அளித்தார். அதன்பேரில் ஆணையர் வரதராஜையும், பொன்.நாகராஜையும் போலீசார் கைது செய்து 2 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். மேலும் தஞ்சை காந்திசாலையில் உள்ள மாநகராட்சி ஆணையர் குடியிருப்புக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். பின்னர் 2 பேரும் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: