அதிரை நகரில் அனைத்து தரப்பு மக்களும் மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகின்றனர். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சில விஷமிகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடிய வகையில் பொதுமக்களின் பெயரை பயன்படுத்தி போஸ்டர்களை அதிரை நகரில் ஒட்டியுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் சூழலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தஞ்சை மாவட்ட ஊடக பிரிவு தலைவர் மணிச்சுடர் சாகுல் ஹமீதும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதன்படி அவர் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், அதிரையில் மதவாத சக்திகள் ஒரு போதும் கால் பதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். மேலும் அதிரை மக்கள் அனைவரும் ஒற்றுமையை மட்டுமே விரும்புவதாக சுட்டிக் காட்டியிருக்கும் சாகுல் ஹமீது, பொதுமக்களின் பெயரை பயன்படுத்தி விஷம பிரச்சாரத்தில் ஈடுபடும் மர்ம நபர்களை கண்டறிந்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து பொது அமைதியை பேணி காக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Your reaction