அதிரை நகர திமுக-வில் நகர செயலாளர் இராம.குணசேகரன், முன்னாள் சேர்மன் S.H.அஸ்லம் ஆகியோருக்கு இடையே கோஷ்டிபூசல் நிலவி வருகிறது. இது நடந்து முடிந்த நகராட்சி மன்ற தேர்தலில் வெளிப்படையாக தெரிந்தன. குறிப்பாக 2வது வார்டில் போட்டியிட்ட S.H.அஸ்லமின் மனைவியை ஆதரித்து அடிக்கப்பட்ட நோட்டிஸ்களில் திமுக நகர செயலாளர் இராம.குணசேகரனின் புகைப்படம் இடம்பெறவில்லை. அதேபோல் S.H.அஸ்லமின் மனைவியை இராம.குணசேகரனும் ஆதரித்து பிரச்சாரம் செய்யவில்லை. இது ஒருபுறமிருக்க தேர்தல் வெற்றிக்கு பிறகு நகர துணை செயலாளர் அன்சர் கான் அளித்த தகவலின் பேரில் இராம.குணசேகரன் தலைமையில் நடைபெற்ற திமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் S.H.அஸ்லம் பங்கேற்றார். அப்போது திமுக நகர செயலாளர் பொறுப்பில் இருக்கும் இராம.குணசேகரன், முன்னாள் சேர்மன் அந்தஸ்தில் இருக்கும் S.H.அஸ்லமை கூட்டம் நடைபெறும் இடத்தை விட்டு வெளியேற சொன்னதாக தெரிகிறது. இவ்வாறு நகர திமுக-வில் இருவரும் இருவேறு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். இது அரசியலில் சர்வ சாதாரணமான ஒன்று. ஆனால், இதனை வைத்து ஊரின் அமைதியை கெடுக்கும் முயற்சியில் மர்ம விஷமிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த அரசியல் சதுரங்க வேட்டையில் அதிரையின் அமைதி, ஒற்றுமை, வளர்ச்சியை பாதிக்கும் வகையில் செயல்படும் சுயநல மர்ம விஷமிகளை இனம்கண்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

Your reaction