தமிழ்நாட்டில் இன்று 54 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கோவிந்தராவ் ஐஏஎஸ், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மேலாண் இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சை மாவட்ட ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐஏஎஸ் ?
குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று, 2003ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியைத் தொடங்கினார் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். 2004 முதல் 2006 வரை உசிலம்பட்டியில் ஆர்டிஓ-வாக பணியில் சேர்ந்தார். மதுரை டிஆர்ஓ-வாகவும், பொறுப்பு கலெக்டராகவும் திறம்படச் செயல்பட்டவர்.
2012ம் ஆண்டு ஐஏஎஸ்-ஆக பதவி உயர்வு பெற்ற இவர், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராகவும் பணியாற்றியிருக்கிறார். முதல்வர் அலுவலக இணைச் செயலாளராகவும், மறுவாழ்வுத்துறையின் இயக்குனராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ள இவர், தற்போது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியை நடத்த அமைக்கப்பட்ட 10 பேர் கொண்ட ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவில், இவருடைய பங்களிப்பும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பல்வேறு அனுபவங்களை கொண்டுள்ள தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐஏஎஸ் தற்போது தஞ்சை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Your reaction