கன்னியாகுமரியைப் புரட்டிப்போட்ட மழை!வேகமாக காற்று வீசுவதால் மரங்கள் சாய்வு!

2073 0


குமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழை மற்றும் வேகமாக வீசும் காற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிக் கிடக்கிறது. நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையிலான ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனிடையே, கன்னியாகுமரி அருகே இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒகி புயலாக மாறியுள்ளது என்றும் இந்தப் புயல் கன்னியாகுமரிக்கு தெற்கே 60 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

குமரி கடலோரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. இது வலுவடைந்து புயலாக மாறவுள்ளது. இந்தப் புயலுக்கு ஓகி எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குமரி மாவட்டம் முழுவதும் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ச்சியாக மழை பெய்துவருகிறது. வேகமாக காற்று வீசுவதால் 500-க்கும் அதிகமான மரங்கள் சாய்ந்துவிழுந்தன. முக்கியச் சாலைகள் மட்டும் அல்லாமல் கிராமச் சாலைகள், தெருக்களிலும் மரங்கள் விழுந்து கிடப்பதால் பொதுமக்களால் எங்கேயும் செல்ல முடியாத நிலைமை உள்ளது.

 

கன்னியாகுமரி கடலில் புயல்சின்னம் உருவாகியுள்ளதால் பொதுமக்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும், அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டுமே வெளியில் செல்லலாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் அறிவுறுத்தி இருந்தார். அத்துடன், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதையும் மீறி கடலுக்குள் சென்ற மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர். அதனால் அவர்களது உறவினர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

 

தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக குமரி மாவட்டமே ஸ்தம்பித்துப் போய் இருக்கிறது. லட்சக்கணக்கான வாழை மரங்கள் சரிந்து விழுந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவாத்து பாதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நகரம் முழுவதும் இருளடைந்து கிடக்கிறது.

 

மரங்கள் சாய்ந்ததாலும் கடுமையான மழையால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 3 மணி நேரமாக வாகனங்கள் இயக்கப்படவில்லை. அத்துடன், அந்த மார்க்கத்தில் ரயில்களையும் தெற்கு ரயில்வே நிறுத்திவைத்துள்ளதால் வியாபாரம் மற்றும் மருத்துவ வசதிக்காக திருவனந்தபுரம் செல்ல வேண்டியவர்கள் போக முடியாத நிலைமை உருவாகி இருக்கிறது.

 

கனமழையால் தூத்தூரில் உள்ள பயஸ் மேல்நிலைப்பள்ளியின் வடக்குப் பகுதியில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. இன்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்ததால் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. நாகர்கோவில் ராணி தோட்டம் பகுதியில் அரசுப் பணிமனை முன்பு சாலையில் மரம் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறவன் குடியிருப்பு அடுத்த வட்டக்கரை பாலம் அருகில் உள்ள சாலையில் தென்னை மரங்கள் விழுந்து கிடக்கின்றன.

 

நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் இரு செல்போன் டவர்கள் சரிந்து விழுந்தன. ரப்பர், வாழை, தென்னை மரங்கள் விழுந்ததால் அவற்றைப் பயிரிட்டிருந்தவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். பல்வேறு பகுதிகளிலும் செல்போன் கோபுரங்கள் சரிந்ததால் மாவட்டம் முழுவதும் செல்போன் சேவையிலும் குறைபாடு ஏற்பட்டுள்ளது. மின்சாரம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மொத்தத்தில் குமரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
இதனிடையே, கன்னியாகுமரி அருகே இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒகி புயலாக மாறியுள்ளது என்றும் இந்த புயல் கன்னியாகுமரிக்கு தெற்கே 60 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: