தமிழக சட்டமன்றத்தேர்தல் : அரசியல் தலைவர்களின் வாக்குப்பதிவும், கருத்தும்!

932 0


தமிழகத்தில் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை முதலே அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்கள். குடும்பத்தினருடன் வாக்களிக்க வந்த தலைவர்கள், வாக்களித்துவிட்டு தங்களின் கருத்துகளை பகிர்ந்தனர்.

முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி:

தமிழக முதல்வரும் சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமி தன் குடும்பத்தினருடன் சிலுவம்பாளையம் தொடக்க நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். அப்போது, “தமிழக வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையினை நிறைவேற்றவேண்டும்” என பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்:

துணை முதல்வர் ஓபிஎஸ் தனது குடும்பத்தினருடன் தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை தெற்குரத வீதி செவன்த் டே நர்சரிப் பள்ளியில் வாக்களித்தார். அப்போது, “அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும்” என பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்:

தேனாம்பேட்டை எஸ்.ஐ.டி கல்லூரியில் மு.க ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார். அப்போது “பொதுமக்கள் அமைதியாக ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மே-2 ஆம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் திருப்தி என்றும் சொல்ல முடியாது, அதிருப்தி என்றும் சொல்ல முடியாது” என பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்:

சென்னை அடையாறு தாமோதரபுரம் வாக்குச்சாவடியில் தனது குடும்பத்துடன் வாக்களித்தார் டிடிவி தினகரன். அப்போது, “தமிழகத்தில் பெரிய அளவில் மாற்றம் வரும், மக்கள் அதை உருவாக்குவார்கள் என நம்புகிறேன்” என்றார்.

விசிக தலைவர் தொல். திருமாவளவன்:

அரியலூர் மாவட்டம் அங்கனூரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனது வாக்கினைப் பதிவு செய்தார். அப்போது, “தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்குச் சேவை செய்யும் நிறுவனம்” என கடுமையாக கருத்து தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினைச் செலுத்தினார். அப்போது, “பணநாயகம் இருக்கும்வரை ஜனநாயகம் என்பது கேலிக்கூத்துதான்” என்றார்.

சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் தனது வாக்கை பதிவு செய்தார். அப்போது, “ஒரு மாதம் வாக்குப் பெட்டியை பாதுகாப்பது என்ன நடக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வரிசையில் நின்று வாக்களித்தார். அப்போது, “திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்:

முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கினை செலுத்தினார். அப்போது, “எங்களுடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டும் என்பதில் எந்தவிதமான ஐயமும் கிடையாது” என பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.

மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி:

மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, நாகை மாவட்டம் தோப்புத்துறையில் தான் படித்த பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்கினை செலுத்தினார். அப்போது, ஜனநாயக பண்டிகையில் அனைவரும் வாக்களிப்பது கடமை எனக்கூறியவர், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்தியாவே திரும்பி பார்க்கும் அரசியல் புரட்சி மே 2 அன்று வெளிப்படும் என்றார்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: