இந்தியா முழுவதும் கொரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளது. பொதுமக்கள் முறையாகப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்காமல் இருப்பதும் நாட்டில் கண்டறியப்பட்டுள்ள மரபணு மாறிய கொரோனா வகையும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான நல்லகண்ணுவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 95 வயதான அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நல்லகண்ணு விரைவாக கொரோனா தொற்றில் இருந்து மீள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்களும் தெரிவித்திருந்தனர். தற்போது சுமார் ஒரு வாரத்திற்குப் பின் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நல்லகண்ணு மீண்டுள்ளார். வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்த அவர் தற்போது வீடு திரும்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் மூன்றாவது நாளாக கொரோனா பாதிப்பு 3000ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,581 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,99,807ஆக அதிகரித்துள்ளது. அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 21,958ஆக உயர்ந்துள்ளது.
Your reaction