68 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை.. கொண்ட கொள்கையில் மாறாத மனிதர் தா.பா !

179 0


தா.பாண்டியன் அரசியல் வாழ்க்கை அவ்வளவு எளிதாக யாருக்கும் வாய்த்து விடாது.. மொத்தம் 68 வருடங்களாக கொண்ட கொள்கையில் மாறாமல், மக்கள் சேவையாற்றியவர் தா.பாண்டியன் என்றால்.. சம காலத்தில் அது எவ்வளவு பெரிய சாதனை!

மிரட்டல்களுக்கும், பணத்திற்கும் என பல காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்து வேறு கட்சியில் சேரும் எம்எல்ஏக்களை பார்த்து, அரசியலையே வெறுத்துப்போய் இருக்கும் மக்களுக்கு, தா.பாண்டியன் வாழ்க்கை ஒரு கிரியா ஊக்கி.

ஒரே கொள்கை.. அது, எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற பொதுவுடமை.. அதை நோக்கி, துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட குண்டு, பாதை மாறாததை போல பயணித்தவர்தான், தா.பாண்டியன்.

1932ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த கீழவெள்ளாளப்பட்டி கிராமத்தில் பிறந்தவர், தா.பாண்டியன். அப்போது இவரால்தான் உலக புகழை பெறப்போகிறோம் என்று அந்த கிராமம் அறிந்திருக்கவில்லை. இளம் வயது முதலே, ஏழை, எளியவர்கள், ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றை பார்த்து, ஏன் இந்த ஏற்றத்தாழ்வு என்ற கேள்வியை மனதில் எழுப்பியபடி இருந்தார் தா.பாண்டியன்.

இதன் காரணமாக கம்யூனிச சித்தாந்தம் மீது பெரும் ஆர்வம் தா.பாண்டியனுக்கு ஏற்பட்டது. இதன்விளைவாக, 1953ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார் தா.பாண்டியன். இதன்பிறகு, மறையும் வரை அவர் தோள்களில் சிவப்பு துண்டு நீக்கமற நிறைந்துதான் இருந்தது. காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பயின்று அதே கல்லூரி ஆங்கில பேராசிரியரான தா.பாண்டியன், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். பின்னர், 1989ம் ஆண்டு எஸ்.ஏ.டாங்கே உடன் இணைந்து ஐக்கிய பொதுவுடமை கட்சியை தொடங்கி அதன் பொதுச் செயலாளராக இருந்தார்.

1989 மற்றும் 1992 ஆகிய ஆண்டுகளில், அடுத்தடுத்து, வட சென்னையிலிருந்து காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட்டு, 2 முறை, லோக்சபா எம்.பி.யாகவும் பதவி வகித்தார் . 16 ஆண்டு காலம் கம்யூனிஸ்ட் கட்சி இதழான ஜனசக்தி ஆசிரியராக பணியாற்றியவர் தா.பாண்டியன். இதன்பிறகு, 2000மாவது ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். மறையும் வரை அதே கட்சியில்தான் பயணித்தார்.

2005 முதல் 2015 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ் மாநில செயலாளராக தொடர்ந்து தேர்வானவர் தா.பாண்டியன். மறையும் முன்பு வரை பிரச்சார பீரங்கியாக பொதுவுடமைக்கான வக்கீலாக பொது மேடைகளில் முழங்கியவர் தா.பாண்டியன். கட்சி பேதமின்றி அனைத்து தரப்பு தலைவர்களால் மதிக்கப்பட்ட ஓர் தலைவர். கருணாநிதி,ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களுடன் கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி இடங்கள் பற்றிய பேச்சுவார்த்தை நடத்த இவரே சரியானவராக இருந்தார்.

நேர்த்தியான உச்சரிப்பில் கருத்துகளை ஆணித்தரமாகக் கூறக்கூடியவராக இருந்தார். இவரது தமிழ் உச்சரிப்புக்காகவே தனி ரசிகர் கூட்டம் உண்டு. 8 புத்தகங்களை எழுதியுள்ளார். பாரதியாரை பொதுவுடைமை கவிஞராக அடையாளப்படுத்தியதில் முக்கியமானவர் தோழர் தா.பாண்டியன்தான்.

அவர் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் பயணித்திருக்கலாம். ஐக்கிய பொதுவுடமை கட்சியின் பொதுச் செயலாளராக இருந்திருக்கலாம். ஆனால் இவை அத்தனையின் அடிப்படை கொள்கையும் ஒன்றே ஒன்றுதான். அது.. “கடையனுக்கும் கடைத்தேற்றம்” என்பது. கொண்ட கொள்கையில், 68 வருடங்களாக ஊசி முனை அளவு கூட மாறாதவர். 68 ஆண்டுகாலமாக தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக இருந்த அறிவுச் சுடர் இன்று அணைந்தது.

Source : One India TamilYour reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: