‘புதுச்சேரியில் பாஜக செய்வது ஒத்திகை ; அடுத்து தமிழகம்தான்’ – எச்சரிக்கும் திருமாவளவன் !

297 0


புதுச்சேரி மாதிரிதான் தமிழகத்திலும் நடக்க கூடும், புதுச்சேரியில் நடப்பது தமிழகத்திற்கான ஒத்திகையே என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எச்சரித்துள்ளார்.

புதுச்சேரியில் நாராயணசாமி அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பை வெல்ல முடியாமல் பதவியை இழந்தது. இந்த நிலையில்தான், முன்னதாக தொல்.திருமாவளவன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில் திருமாவளவன் கூறியதாவது : ஆட்சிக்கவிழ்ப்பு என்னும் அநாகரீக அரசியலை புதுச்சேரியில் அரங்கேற்றும் பாஜகவின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்களுக்கு தக்க பாடத்தை புதுச்சேரி வாக்காளர்கள் புகட்டுவார்கள் என எச்சரிக்கிறோம்.

இந்தியா முழுவதும் ஜனநாயக நெறிமுறைகளைக் காலில் போட்டு மிதித்து அனைத்து விதமான அநாகரீக வழிகளையும் பின்பற்றி பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு 10 நாட்கள்கூட இல்லாத நிலையில் புதுச்சேரியிலும் அதே சதிவேலையில் ஈடுபட்டிருக்கிறது.

அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் கோவா, மேகாலயா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தனிப் பெருங்கட்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்றபோதிலும் அங்கெல்லாம் மக்களின் தீர்ப்புக்கு எதிராக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்களை விலைக்கு வாங்கியும், மிரட்டியும் தனது ஆட்சியை பாஜக அமைத்திருக்கிறது.

இது நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கேவலப்படுத்துவதோடு, வாக்களித்த மக்களை அவமதிப்பதுமாகும். இப்போது புதுச்சேரியிலும் அதே விதமாக ஆட்சிக் கவிழ்ப்பு அரங்கேற்றப்படுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவின் நெருக்குதலால் ஒருவர் பின் ஒருவராக அக்கட்சியிலிருந்து விலகி வருகிறார்கள். இது அம்மாநில மக்களின் விருப்பத்துக்கு எதிரானதாகும். புதுச்சேரி மக்கள் எதிர்வரும் தேர்தலில் பாஜகவுக்கும் தன்னலத்துடன் ஆட்சியைக் கவிழ்க்க துணைபோயுள்ள ‘கட்சி மாறிகளுக்கும்’ தக்க பாடத்தைப் புகட்டவேண்டும்.

புதுச்சேரியில் நடக்கும் நிகழ்வுகளிலிருந்து அரசியல் கட்சிகளும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இதனை தமிழ்நாட்டிலும் சனாதனிகள் விரிவுபடுத்துவார்கள் என்பதையும், புதுச்சேரியில் நடப்பது தமிழ்நாட்டுக்கான ஒத்திகையே என்பதையும் அறிய முடிகிறது. அரசியல் கட்சிகள், கொள்கை பிடிப்பு இல்லாத தற்குறிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினால், என்ன ஆகும் என்பதை உணர்ந்து இனிவரும் காலங்களில் எச்சரிக்கையோடு நடந்துகொள்ளவேண்டும்.

மக்களிடம் வாக்கு வாங்கி ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியாத பாஜக, இப்படி பின்வாசல் வழியாக புதுச்சேரியில் காலூன்ற முற்படுவதை புதுச்சேரி மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். ஜனநாயக விரோதிகளுக்கு தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் தக்க பாடத்தை கற்பிப்பார்கள் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: