“அப்பாவை இழந்தது மிகவும் கடினமான தருணம்!” – ராகுல் உருக்கம்!

484 0


அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினருமான ராகுல்காந்தி, இன்று (17/02/2021) புதுச்சேரிக்கு வருகை தந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து, முத்தியால்பேட்டையில் உள்ள பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரிக்கு ராகுல்காந்தி, இன்று (17/02/2021) மதியம் 02.35 மணிக்கு வந்தார். பின்பு, அங்குள்ள பாரதிதாசன் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய ராகுல்காந்தி, கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர், “பெண்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி என அனைத்துத் துறைகளிலும் 50 சதவீதம் என்பதை விட 60 சதவீதம் வழங்குவது அவசியம். நீதிமன்றங்கள், ஊடகங்கள், மக்களவை, மாநிலங்களவை, பேரவைகள் உள்ளிட்டவற்றை இளம்பெண்கள் அதிக அளவு ஆக்கிரமித்து அவை சுயமாகச் செயல்படும்படி செய்தால் ஜனநாயகம் வலுப்படும். நாட்டில் பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் உள்ளன. அவற்றை முழுமையாகப் பாதுகாக்க வேண்டும். மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை மற்றவர்கள் மீது நான் திணிக்கமாட்டேன். தமிழ்க் கலாச்சாரத்தை மதிக்கிறேன்; பல்வேறு சிந்தனைகளைக் கொண்டது தான் இந்தியா. ஒற்றைச் சிந்தனைக்கு இடமில்லை.

பெண்கள் வன்முறையால் பாதிக்கப்படும்போது தாங்களாகவே ஆண்களுக்கு எதிராக வெகுண்டு எழ வேண்டும். பெண்களுக்குப் பெண்களால்தான் பாதுகாப்பு அளிக்க முடியும். பெண்கள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டுவர வேண்டும். பெண்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற சிந்தனையைச் சமுதாயத்தில் உருவாக்கும் போதுதான் பெண்களுக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும். குடும்பத்தில் பெண்களுக்கு நிதி அதிகாரம் வழங்க வேண்டும். கரோனா காலகட்டத்தில் 5 சதவீத தொழில் அதிபர்களுக்கு ரூபாய் 1.57 லட்சம் கோடி வரிச் சலுகைகளை மத்திய அரசு வழங்கியது. ஆனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல பேருந்து வசதியைக் கூட செய்து தரவில்லை.

இப்போது விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படுகிறது. வேலைவாய்ப்புக்கு முதுகெலும்பாக இருக்கும், இவற்றை முறித்துவிட்டால் வேலைவாய்ப்புகள் பறிபோகும். இதனால்தான் வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்க்கிறோம். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தனிப்பட்ட முறையில் யார் மீதும் கோபம், வன்மம் எனக்கு இல்லை. அப்பாவை இழந்தது மிகப்பெரிய கடினமான தருணம். அதில், தொடர்புடையவர்களை நான் மன்னித்துவிட்டேன். வன்முறை மூலம் நம்மிடம் இருந்து எதையும் எடுத்துவிட முடியாது” என்றார். இந்த கலந்துரையாடல் சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: